கரோனா வைரஸ் தொற்றால் உலகமே அரண்டுபோயுள்ள நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்துள்ளது. இதனால் திரையுலகமே முடங்கியுள்ள நிலையில், நடிகர்கள் பலரும் பொதுமக்களுக்கு வீடியோக்கள் மற்றும் சமூகவலைத்தள பதிவுகள் மூலம் கரோனா விழிப்புணர்வைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் கரோனா அச்சம் தொடர்பாக இளைஞர்களுக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில்...
"நான் இளைஞர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். நிலைமை ரொம்ப சீரியஸாக போய்க் கொண்டிருக்கிறது. அரசாங்கம் எப்படியாவது இந்த வைரஸைக் கட்டுப்படுத்தி முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று பாடுபடுகிறது. காரணமே இல்லாமல் வெளியே சுற்றுவது, தேவையில்லாமல் காவல்துறையினருக்கும் மற்றவர்களுக்கும் தொந்தரவு கொடுப்பது என்று நடந்து கொள்ளாதீர்கள். வீட்டில் அடங்கி இருங்கள். பெற்றோர்களுக்கு உதவியாக இருங்கள். இந்த வைரஸை ஒழிப்பதற்கு மத்திய அரசாங்கத்திற்கும், மாநில அரசாங்கத்திற்கும் நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். என்னை விட நீங்கள் அனைவரும் சிறுபிள்ளைகளாகத் தான் இருப்பீர்கள். இருந்தாலும் உங்களை எல்லாம் இருகரம் கூப்பிக் கேட்டுக் கொள்கிறேன். தயவுசெய்து அரசாங்கமும், பெற்றோர்களும் சொல்வதைக் கேளுங்கள். இந்த வைரஸை ஒழிப்பதற்கு உங்களால் ஆன உதவியைச் செய்யுங்கள். நீங்கள் காரணமில்லாமல் வெளியில் வந்து சுற்றாமல் வீட்டிற்குள் இருந்தாலே, நிச்சயமாக இந்த வைரஸை ஒழிக்கலாம். தயவுசெய்து நான் சொல்வதைக் கேளுங்கள்" எனக் கூறியுள்ளார்.