இயக்குநர் மணிரத்னம், ஜெயேந்திரா தயாரிப்பில் கௌதம் மேனன், கார்த்திக் நரேன், ப்ரியதர்ஷன் உள்ளிட்ட 9 இயக்குநர்களின் கூட்டணியில் மனிதர்களின் 9 உணர்வுகளை மையமாக வைத்து உருவாகிய நவரசா திரைப்படம் கடந்த 6ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியானது. கரோனா பெருந்தொற்று காரணமாக திரைத்துறை முடங்கியுள்ளதால் நலிந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு உதவும் நோக்கில் இந்தத் திரைப்படமானது எடுக்கப்பட்டது. இப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருமே சம்பளம் இன்றி இப்படத்தில் பணியாற்றினார்.
இந்த நிலையில், இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து மணி ரத்னம் மற்றும் ஜெயேந்திரா கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், "எங்களுடைய வேண்டுகோளுக்கு இணங்கி ஒன்றுகூடி ஒரு ரூபாய் கூட ஊதியம் பெறாமல் தம் நேரத்தையும், உழைப்பையும் நல்கி நவரசாவை உருவாக்கிய அனைத்து இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு எங்கள் உளமார்ந்த நன்றி. உங்களுடைய இந்தப் பேராதரவால் ஆறு மாதங்களுக்கு நம் திரைத்துறையைச் சார்ந்த 12,000 குடும்பத்தினரின் வீட்டு தேவைகளுக்கு நம்மால் உதவ முடிந்தது. உதவி என்பதைத் தாண்டி, நம் கலைக் குடும்பத்தினருக்கு நம் அன்பை, அக்கறையை, நன்றியை உணர்த்த முடிந்தது. பெருமையில் நன்றியுணர்ச்சியில் மகிழ்ச்சியின் உச்சத்தில் நிற்கிறோம் நாங்கள். நீங்களும் தானே? நீங்கள் இல்லாமல் இந்த மகிழ்ச்சியில்லை. மீண்டும் உங்களுக்கு நன்றி சொல்கிறோம்" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளனர்.