Skip to main content

"இந்தியில் நடித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை" - மகேஷ் பாபு திட்டவட்டம்

Published on 11/05/2022 | Edited on 11/05/2022

 

mahesh babu said dont waste my time acting with hindi film

 

சமீபகாலமாக தென்னிந்திய பிரபலங்களுக்கும், பாலிவுட் பிரபலங்களுக்கும் இடையே இந்தி மொழி குறித்த விவாதம் அனல் பறக்கிறது. முன்பெல்லாம் இந்தியாவில் திரைப்படங்களில் கூட இந்தி படங்களே அதிகம் ஆதிக்கம் செலுத்தியது. அண்மையில் இந்திய படங்களே இந்தி படங்கள் என்று கட்டமைக்க பலரும் முயற்சி செய்ததாக பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி பேசியிருந்தார்.  ஆனால் தற்போது நிலைமை மாறி வருவதாகவும் தென்னிந்திய மொழிபடங்களான பாகுபலி, ஆர்.ஆர்.ஆர், பாகுபலி-2, கே.ஜி.எஃப்  ஆகிய படங்கள் இந்தி மொழியில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ஹிட்டடித்த வரலாற்றை மாற்றி வருவதாக சினிமா பிரபலங்கள் பலர் கூறிவருகின்றனர். இதனால் இந்தியில் தென்னிந்திய நடிகர்களுக்கும், படங்களுக்கும் மவுசு கூடி வருவதால் பாலிவுட் இயக்குநர்கள் தற்போது தென்னிந்திய நடிகர்கள் மீதும், படங்கள் மீதும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளன. தனுஷ், விஜய் சேதுபதி, பிரபாஸ் உள்ளிட்ட சில தென்னிந்திய நடிகர்கள் பாலிவுட் படங்களில் நடித்து வருகின்றனர். 

 

இந்நிலையில் மகேஷ் பாபு தயாரித்துள்ள மேஜர் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மகேஷ் பாபுவிடம்  ஏன் நீங்கள் இந்தி படங்களில் நடிப்பதில்லை என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த மகேஷ் பாபு, "இந்தியில் என்னை நடிக்கச் சொல்லி நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ஆனால், அதில் நடித்து என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அப்படியே நடித்தாலும் எனக்கு ஏற்ற சம்பளத்தை பாலிவுட்டால் கொடுக்க முடியாது. தெலுங்கு படங்களில் நடிப்பதே எனது பலம். பான் இந்தியா ஸ்டாராக எனக்கும் துளியும் விருப்பமில்லை. நான் நடித்த தெலுங்கு படங்களும், மற்ற படங்களும் அனைவராலும் ரசிக்கப்பட வேண்டும் " எனத் தெரிவித்துள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்