
கடந்த 2010ஆம் ஆண்டு சிம்பு, திரிஷா, நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. காதலர்கள் மத்தியில் மிகவும் கொண்டாடப்பட்ட இப்படத்தின் 2ஆம் பாகம் குறித்து விழா ஒன்றில் பேசிய கவுதம் மேனன். விண்ணைத்தாண்டி வருவாயா 2ஆம் பாகம் உருவாக இருப்பதாகவும், இப்படத்தில் கார்த்தி மறுபடியும் ஜெஸ்ஸியை 7 ஆண்டுகள் கழித்து சந்திப்பது தான் கதைக்களமாக இருக்கும் என்று அறிவித்திருந்தார். பின்னர் இந்த செய்தியை உறுதிப்படுத்தும் விதமாக விண்ணைத்தாண்டி வருவாயா 2ஆம் பாகத்தில் சிம்புவுக்கு பதிலாக மாதவன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பதை மாதவன் தன் டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். அப்படி ஆகும் பட்சத்தில் மின்னலே படத்திற்கு பிறகு கவுதம் மேனன், மாதவன் வெற்றி கூட்டணியில் வெளியாகப்போகும் இரண்டாவது படமாக இது அமையும்.
'விண்ணைத் தாண்டி வருவாயா' படம் இன்றும் தமிழக இளைஞர்களால் மறக்க முடியாத படமாக இருக்கிறது. அப்படிப்பட்ட வெற்றி பெற்ற படத்தில் நாயகனாக நடித்த சிம்பு அதன் அடுத்த பாகத்தில் இல்லாமல் இருப்பது பல கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் சிம்பு கலந்துகொள்ளவில்லை, படப்பிடிப்பிலும் சரியாக ஒத்துழைக்கவில்லை என்று இயக்குனர் கெளதம் மேனன் கூறியிருந்தார். அதன் பிறகு 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' பட தயாரிப்பாளரும் சிம்புவின் மீது பல குற்றச் சாட்டுகளை வைத்தார். இந்நிலையில், மீண்டும் சிம்புவை வைத்து ரிஸ்க் எடுக்க கௌதம் தயாராக இல்லை என்பதாலேயே அவரைத் தவிர்த்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இன்னொரு தரப்பில், இது முந்தைய 'விண்ணைத் தாண்டி வருவாயா'வின் தொடர்ச்சியல்ல, புதிய கதை என்பதால் சிம்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.