உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,97,810 ஆக அதிகரித்துள்ள நிலையில், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,28,405 ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59,140 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மூன்றாயிரத்தைக் கடக்கவுள்ள நிலையில் 68 பேர் இந்தத் தொற்றால் மரணமடைந்துள்ளனர். குறிப்பாகத் தமிழகத்தில் 400க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா பரவலைத் தடுக்க முன்னதாக கோலிவுட் திரைப்பட ஷூட்டிங் நிறுத்தப்பட்டுவிட்டது.கடந்த ஒரு மாதமாக ஷூட்டிங் எதுவும் நடைபெறாத நிலையில் சினிமா தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் சினிமா தொழிலாளர்கள் சங்கமான ஃபெப்ஸியின் தலைவர் ஆர்.கே.செல்வமணி பிரபலங்களிடம் நிதியுதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து ரஜினி 50 லட்சம், சூர்யா&கார்த்தி 10லட்சம், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி தலா 10 லட்சம், தனுஷ் 15 லட்சம் என்று நிதியுதவி அளித்தனர். இந்த வரிசையில் பல நடிகர்கள் தொழிலாளர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் கொடுத்தனர்.
இந்நிலையில் நடிகைகள் யாரும் பெரிதாக நிதியுதவி அளிக்கவில்லை என்று விமர்சனம் வைக்கப்பட்டது. இந்நிலையில் ஃபெப்சிக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிற நயன்தாரா ரூ.20 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.