1993ஆம் ஆண்டு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ’ஜென்டில்மேன்'. இப்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாகத் தயாராகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் 'ஜென்டில்மேன் ஃபிலிம் இன்டர்நேஷனல்' சார்பாக இப்படத்தைத் தயாரிக்கிறார். கோகுல் கிருஷ்ணா இயக்கும் இப்படத்தில் நயன்தாரா சக்ரவர்த்தி கதாநாயகியாக நடிக்கிறார். தெலுங்கு நடிகர் சேத்தன் சீனு கதாநாயகனாக நடிக்க இசையமைப்பாளராக ஆஸ்கர் வென்ற கீரவாணி இசையமைக்கிறார். வைரமுத்து பாடலாசிரியராகப் பணியாற்றுகிறார்.
இந்நிலையில், இப்படத்தின் ஆரம்ப விழா மற்றும் கீரவாணிக்கு பாராட்டு தெரிவிக்கும் விழாவாகவும் தயாரிப்பாளர் குஞ்சுமோன் நடத்தியிருக்கிறார். இதில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சவுத்ரி, கோகுலம் பைஜூ, தயாரிப்பாளர் காட்ரகட்ட பிரசாத், கே.ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய எல்.முருகன், "தமிழ் சினிமாவை உலக அரங்கில் கொண்டு சென்று, தமிழர்களுக்குப் பெருமை சேர்த்து தந்த இசையமைப்பாளர் கீரவாணிக்கு பாராட்டு. தமிழ் சினிமாவினுடைய முகத்தை மாற்றிய பெருமைக்குரியவர் தயாரிப்பாளர் குஞ்சுமோன். இந்தியாவில் முதல் முதலில் 1913ஆம் ஆண்டு ஹரிஷ் சந்திரா படம் வெளியானது. அதில் தாதா சாகிப் பால்கே நடித்து தயாரித்திருந்தார். அதைத் தொடர்ந்து இந்திய சினிமா உலகத்தில் மிகப் பெரிய ஒரு முக்கிய பங்காற்றிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக தமிழ் சினிமா, பாகுபலி, பொன்னியின் செல்வன் சர்வதேச அளவில் உயர்த்திக் கொண்டிருக்கிறது. இதற்கு தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் தான் முக்கிய பங்கு ஆற்றியிருக்கிறார்கள். ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் முக்கியமான வரலாறு எம்.ஜி.ஆர், சிவாஜி, என்.டி.ராமராவ், ராஜ்குமார் ஆகியோரின் கதைகள். இவர்களது சினிமாக்கள் எல்லாம் மக்களுக்கு ஒரு பொழுதுபோக்கு படமாக மட்டும் இல்லாமல், சமூக கருத்துக்களை மக்களிடம் சேர்த்துள்ளது.
அந்த வகையில் ஜென்டில்மேன் படம் நல்ல கருத்து கொண்டது. ஒரு மருத்துவ மாணவன் அவரது கனவை எட்டமுடியாததை அதில் சொல்லியிருப்பார்கள். மேலும் மற்றவர்களுக்கு எப்படி உதவி செய்ய வேண்டும் என்பதும் காண்பிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து காதலன், சூரியன் என சாதனைப் படங்களை கொடுத்துள்ளார் குஞ்சுமோன்" என்றார்.