
எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் நடிப்பில் கடந்த ஜனவரியில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘குடும்பஸ்தன்’. வைசாக் இசையமைத்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படக்குழுவினரை கமல்ஹாசன், பா.ரஞ்சித் உள்ளிட்டவர்கள் நேரில் அழைத்து பாராட்டினர்.
இப்படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக நடித்து கவனம் பெற்றவர் சான்வே மேகன்னா. இவர் தற்போது மணிகண்டன் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “எண்ணற்ற உரையாடல்கள், இரவு நேர பேச்சுகள், 24/7 நேரமும் நகைச்சுவைகள், சிரிப்புகள், அதுவும் தெலுங்கு, தமிழ், இங்கிலீஷ் கலந்து... இப்படி ஏகப்பட்ட கற்றல்கள்.
உங்களைப் போன்ற சிறந்த நடிகருடன் பணிபுரிவது மிகவும் அழகாக இருக்கிறது. ஒரு சிறந்த சக நடிகரை மட்டுமல்ல, உங்களிடம் ஒரு அற்புதமான நண்பரையும் கண்டுபிடித்ததில் நான் நம்பமுடியாத அதிர்ஷ்டசாலி என்று நினைக்கிறேன். நிறைய அன்பும் மரியாதையும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.