மகேஷ் பத்மநாபன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ருத்ரா, சுபிக்ஷா நடிப்பில் உருவாகியுள்ள 'சக்கரை தூக்கலா ஒரு புன்னகை' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் மற்றும் தயாரிப்பாளர் கே.ராஜன் உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசுகையில், "சக்கரை தூக்கலாக ஒரு புன்னகை என்ற படத்தின் தலைப்பு இலக்கிய நயமிக்கதாக உள்ளது. ருத்ரா மலையாளி. ஆனால், துணிச்சலுடன் தமிழ்ப்படம் எடுக்க வந்திருக்கிறார். மலையாள சினிமா கட்டுப்பாடுகளோடு சிறப்பாக உள்ளது. ஹீரோக்கள் பந்தா இல்லாமல் எளிமையாக இருக்கிறார்கள், ஆனால், தமிழ்சினிமாவில் பந்தாவாகவும் எளிமை இல்லாமல் செயற்கையாகவும் தயாரிப்பாளரை எப்படி காலி செய்யலாம் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சூழலில் தமிழுக்கு படம் எடுக்க வரும் மலையாள சகோதரரை நான் கைகூப்பி வரவேற்கிறேன்.
ரஹ்மான் அண்ணன் இங்கு இருக்கிறார். இந்தப் படத்தில் போட்ட முதலீடு இன்னும் வரவில்லை. ஆனால், அடுத்த இரண்டு படங்களை ஆரம்பித்துவிட்டார். அதன்மூலம் எத்தனை தொழிலாளிகளுக்கு வேலை கிடைத்திருக்கும் என்று யோசித்து பாருங்கள். இந்தப் படம் லாபமடைந்தால் அந்தப் பணத்தையும் கொண்டு படம் எடுப்பார். ஆனால், இன்று 50 கோடி, 100 கோடி என்று சம்பளம் வாங்கும் ஹீரோக்களின் பணம் மீண்டும் சினிமாவிற்கு வருகிறதா? எங்கு சொத்து இருக்கிறது என்று தேடி வாங்கும் அவர்களால் தமிழ்நாட்டிற்கு என்ன பயன்? ஓடிடியில் படத்தை கொடுக்கிறார்கள். உதாரணத்திற்கு அமேசானுக்கு படத்தை கொடுத்தால் அந்த வரிப்பணம் தமிழ்நாட்டிற்கு வருகிறதா? அமேசான் மும்பையில் இருப்பதால் அந்த வரி அங்கு செல்கிறது. அதில்கூட அவர்களால் இந்த தமிழ்நாட்டிற்கு பயனில்லை" எனப் பேசினார்.