Skip to main content

அஜித்திடம் இருக்கும் நேர்மை, ஏன் இவர்களிடம் இல்லை? - தளபதி 63 பற்றி கே.பி.செல்வா ஆதங்கம் 

Published on 27/04/2019 | Edited on 29/04/2019

விஜய்யின் 63 வது படத்தை தெறி, மெர்சல் போன்ற படங்களை இயக்கிய அட்லீ இயக்குகிறார். படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியானதிலிருந்து சர்ச்சையும் தொடங்கியது. பெண்கள் கால்பந்தை மையமாக கொண்ட இந்த படத்தின் கதை என்னிடமிருந்து திருடப்பட்டதாக உதவி இயக்குனர் கே.பி.செல்வா புகார் கொடுத்துள்ளார். சமீபத்தில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து இந்த பிரச்சனைக் குறித்து கே.பி.செல்வா நமக்கு கொடுத்த பேட்டியின் தொகுப்பு... 

 

k.p.selva interview about thalapathy 63

 

சமீபத்தில் உங்களுடைய கேஸ் விசாரணைக்கு வந்தது, அப்போ கோர்ட்டில் என்ன நடந்தது? நீதிபதிகள் என்ன சொல்லியிருக்காங்க?
 

நாங்கள் இரண்டு கதைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கச் சொல்லி தான் பெட்டிஷன் போட்டோம், அட்லீ தரப்பில் டைம் கேட்டார்கள். ஜட்ஜ் ஜூன் 10 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார், கொஞ்சம் முன்பாகவே விசாரிக்க முடியுமா எனக் கேட்டோம். மறுத்துவிட்டார்கள். விசாரணைக்கு அட்லீயின் மேனேஜர் அஷ்வின், அவருடைய வக்கில், ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் வக்கில், எழுத்தாளர் சங்கத்தின் வக்கில் ஆகியோர் வந்திருந்தனர். எனது அண்ணனும் வக்கில்தான், அவர் எனது சார்பாக வாதாடினார்.
 

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரலை, டீசர், ட்ரைலர் எதுவுமே வெளிவராத நிலையில் எப்படி அது அவருடைய கதை என்று சொல்லமுடியும்? என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. அதற்கு உங்களின் பதில் என்ன?
 

நவம்பர் 10 ஆம் தேதி படத்திற்கு பூஜை போட்டு அதிகாரபூர்வமாக படத்தைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்கள். ஆனால், நான் நவம்பர் 2 ஆம் தேதியே விஜய்யின் அடுத்த படம் பெண்கள் கால்பந்தை மையமாக கொண்டது, என கேள்விப்பட்டு அவர்களிடம் பேசிவிட்டேன். அப்போது சர்கார் படத்தின் பிரச்சனையும் நடந்துகொண்டிருந்தது. எனக்குக் கொடுக்கவேண்டிய அங்கிகாரத்தைக் கொடுத்திருந்தால் நான் இதை வெளியே சொல்லியிருக்கவே மாட்டேன். நான் அவர்களுடன் பேசிய ஆடியோ ஆதாரங்களை வாங்குவதற்காக இத்தனை நாட்கள் போராடிக்கொண்டிருந்தேன். அட்லீயின் மேனேஜர் அஷ்வினிடம் அந்த ஆதாரங்கள் இருக்கின்றது. அவரிடம் அதைக் கேட்கும்போதெல்லாம் நான் ஊரில் இல்லை என்றுச் சொல்லி என்னை அலையவிட்டார். எதுவும் முடியாமல் தான் நான் எழுத்தாளர் சங்கத்திடம் சென்றேன். அவர்களாலும் ஏதும் செய்யமுடியவில்லை. இறுதியாக தான் இதை வெளியில் பேச ஆரம்பித்தேன்.
 

உங்களுடைய கதை எப்படி அவர்களிடம் சென்றது?
 

எனக்கும் அட்லீக்கும் பொதுவான நண்பர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். என்னுடைய ஷார்ட் ஃபிலிம்க்கு மியூசிக் போட்டவர் அவருடைய ஷார்ட் ஃபிலிம்க்கும் மியூசிக் போட்டிருக்கிறார். என்னுடைய ஷார்ட் ஃபிலிமின் கேமராமேன் அவரிடமும் கேமராமேனாக வேலை பார்த்துள்ளார். இதுபோல் நிறையபேர் இருக்கிறார்கள். அவர்களிடம் என்னுடையக் கதை சாஃப்ட் காப்பியாக இருக்கிறது. அவர்களிடம் என் கதை அட்லீயிடம் போச்சா என்றுக் கேட்கும் போது அவர்கள் இல்லை என சொல்லியிருக்கணும், ஆனால், நான் அவர்களிடம் பேசி உனக்கான கிரெடிட்ஸை வாங்கித் தருகிறேன் என்றுதான் பதில்வரும். ரொம்ப நாட்கள் காத்திருந்தும் அவர்கள் பேசியதாக தெரியவில்லை. ஒரு நாள் என்னாச்சு, பேசுனீங்களா எனக் கேட்கும்போது, “இல்லடா, அவர் விஜய்க்கு ஏற்ற மாதிரி கமெர்ஷியலாக எடுப்பார். நீ எழுதியிருக்கமாதிரி ராவாக இருக்காது”என்றார்கள். இதுவரை உதவி செய்கிறேன்னு சொன்னவர்கள், இப்போது இப்படி பேசுவதற்கு காரணம் என்ன?  ஏதோ தவறு நடப்பதாக தோன்றியது. அதன்பிறகு அவர்களுடன் பேசுவதையே நிறுத்திவிட்டேன். அப்போ அப்போ போன் வரும், கதைத் தொடர்பாக யாரையாவது பார்த்தியா? எழுத்தாளர் சங்கம் போனீர்களா? ஆடியோ ஆதாரத்திற்காக ஏதாவது ஸ்டெப் எடுத்தீர்களா என்றெல்லாம் கேட்பார்கள். நான் யாரிடமும் எதையும் சொல்லாமல்தான் எழுத்தாளர் சங்கம் போனேன்.
 

படத்தின் கருவான பெண்கள் கால்பந்து என்பதுதான் இங்கு பிரச்சனையா?
 

பெண்கள் கால்பந்தை கருவாகக் கொண்டு யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம். ஆனால், அந்த கதைக்களமும், திரைக்கதையும் முக்கியம். அது என்னுடையது. ஒவ்வொருநாள் அவர்கள் தளபதி 63 படத்தின் ஷூட்டிங்கிற்கு போகும்போதெல்லாம் எனக்குத் தகவல் வரும். அது என்னை நிம்மதியாக இருக்கவிடாது. இவ்வளவு நாட்கள் நான் இந்தக் கதைக்காக உழைத்திருக்கிறேன், இப்போது அமைதியாக இதை விட்டுட்டு போகணும் என்றால் எப்படி. அதனால் தான் எந்த பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை, அதை ஃபேஸ் பண்ணலாம் என்று முடிவு பண்ணிட்டேன்.
 

96 படத்திற்கு இதேபோல் கதை பற்றிய பிரச்சனை வந்தபோது ஏன் முன்னாடியே வரவில்லையெனக் கேள்வி எழுந்தது, அதனால்தான் நீங்கள் ஷூட்டிங் நடக்கும்போதே வந்தீர்களா?
 

இதுவே லேட் என்று நினைக்கிறேன். இவ்வளவு நடந்ததிற்கு நான் நவம்பர் 2 லேயே மீடியாவிடம் வந்திருக்க வேண்டும். நான் அவங்ககிட்ட இருந்து அப்டேட்ஸ் தெரிஞ்சுக்க ஆரம்பித்தேன், அவங்க என்ன பண்றாங்க, அதெல்லாம் என் கதையோடு ஒத்துப்போகுதா என்பதை பார்த்தேன். அப்படி ஒத்துப்போகும் பட்சத்தில்தான் நான் மீடியாவில் தைரியமாக பேசமுடிகிறது. நான் அவங்ககிட்ட போய் என்னமாதிரி நீங்களும் கதை யோசிச்சுருக்கிங்களான்னு கேட்டால், ஆமாம், இல்லை என்பதுதானே பதிலாக இருக்கணும். ஆனால், நீங்க அதை விடுங்க, வேற எதாவது பேசலாம் என்றால் என்ன அர்த்தம். அவங்க நோக்கம் என்னவாக இருக்கும். நீ யாருன்னே தெரியாது வெளியே போடான்னு சொல்லியிருக்கலாம், என் கதையை நீங்க எடுக்குறீங்களான்னு கேட்கல, அப்படி எடுத்தால் எனக்கு க்ளாரிஃபை பண்ணுங்கன்னுதான் கேட்கிறேன். அதையும் செய்யமாட்டீங்க, எழுத்தாளர் சங்கத்திற்கும் வரமாட்டீங்க, என் கதையை எடுக்கவில்லை என்றும் சொல்ல முடியலை, அதுக்கு பதிலா உங்களுக்கு உதவி பண்ணுறேன்னு சொன்னால் அதற்கு அர்த்தம் என்ன?

 

k.p.selva interview about thalapathy 63


 

இப்படி உதவி பண்ணுறேன்னு சொன்னவுங்க யாரு?
 

அட்லீயின் மேனேஜர் நிறைய வாய்ப்புக் கிடைக்க உதவி பண்ணுறேன், பெரிய ஹீரோஸ்கிட்ட கதைச் சொல்லவைக்கிறேன், நம்ப நல்ல அண்டர்ஸ்டாண்டிங்ல இருக்கலாம் என்று பேசினார். ஆனால், எதுக்கு அதெல்லாம், உங்க கதை எங்களுக்கு கிடைச்சுருக்கு, அதனால்தான் இப்படிச் சொல்றோம்னு ஒத்துக்க மாட்றாங்க. ஏ.ஜி.எஸ் கம்பேனியோட மேனஜரும் அங்க இருந்தார். அவர்கள் பேசுவதெல்லாம் மறைமுக அர்த்தத்தோட இருக்கும். நீங்க இப்பதான் வளருறீங்க, பாத்துக்கோங்க, எதுவா இருந்தாலும் யோசிச்சு முடிவு பண்ணுங்கன்னு சொன்னாரு. நான் அங்கிருந்து வந்த அடுத்த நாளே என் படத்துக்கான நடிகர்கள் தேவையின்னு விளம்பரம் கொடுத்தேன். நவம்பர் 4 ஆம் தேதி இந்த விளம்பரத்தைக் கொடுக்க முதல் காரணம் அவங்க தான். ஏனென்றால், ஏற்கனவே 15 பெண்கள் இந்த படத்தில் நடிக்க ரெடியாக இருந்தாங்க. இந்த படத்தில் யார் யார் நடிக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். இருந்தும் நான் இந்த காஸ்டிங் கால் விளம்பரம் கொடுத்தப்பிறகு அவங்க என்னை நடத்தின விதமே மாறிடுச்சு.
 

எப்போது உங்களுடைய கதைதான் தளபதி 63 என்று தெரியவந்தது?
 

அட்லீ பண்ற படம், நான் ஏற்கனவே பவுண்டட் பண்ணின கதை தான் என்று ஆகஸ்ட் மாதமே எனக்கு தெரிஞ்சுட்டு. தெரிஞ்சதும் எனக்கும் அட்லீக்கும் பொதுவாக இருக்கிற நண்பர்கள் கிட்ட நானே போய் கேட்டேன். அவங்க, இல்லை டா, நான் எதுவும் சொல்லவில்லை என்று சொல்வாங்க. நான் ஒரு நடிகையிடம் கதை சொல்லியிருந்தேன். அவங்ககிட்டேயும் கேட்டேன். அவங்களும் நான் ஏதும் கேள்விப்படலை என்று சொல்லிட்டாங்க. 2017 லேயே அந்த நடிகையைப் பார்த்து கதை சொன்னேன், அவங்ககிட்டேயும் சாஃப்ட் காப்பி இருக்கு. என்னிடம் பேசிய நண்பர்கள்கூட அந்த நடிகையும் அட்லீயும் நல்ல க்லோஸ், அவங்ககிட்ட ஏன் கதையை சொன்ன? என்றெல்லாம் கேட்டார்கள்.
 

யார் அந்த நடிகை?
 

எனக்கு அந்த நடிகைமேல் நம்பிக்கை இருக்கு. இருந்தாலும் அவங்க பெயரையும் நான் கோர்ட்டில் சொல்லியிருக்கேன், அதில் என்ன தீர்ப்பு வருகிறது என்பதுதான் எனக்கு முக்கியம். அதனால், மீடியாவில் இதுவரை அவங்க பெயரைச் சொல்லவில்லை. அருவியில் நடித்த அதிதீ பாலனிடம்தான் நான் கதைச் சொல்லியிருந்தேன். நான் யாரையும் சந்தேகப்படாமல் இல்லை. எல்லாரையும் சந்தேகப்பட்டேன், எல்லார்கிட்டயும் எப்படி இது வெளிய போச்சுன்னு கேட்டேன்.
 

பலபேரை நம்பி கதையை சொல்லிட்டமோ, நம்ப மேலதான் தப்புன்னு நீங்க நினைச்சுருக்கீங்களா?
 

நான் சினிமாவின் ஆரம்பத்தில் தான் இருக்கேன். எல்லா படைப்பாளிகள் போலவும் ஃபீட்பேக்குக்காக ஏங்குகிற ஒருத்தன் தான் நானும். ஒரு கதையை எழுதியதும் அதை, கூட இருப்பவர்களிடம் சொன்னால், அதில் இருக்கிற நிறை குறை தெரியவரும், ஆடியன்ஸ் பார்வையில் அவர்கள் ஏதாவது சொல்வார்கள் என்ற நம்பிக்கையில் தான் பலபேரிடம் கதையைப் பகிர்ந்துகொண்டேன். அதற்கான தண்டனையை அனுபவிக்கிறேன். பட்டால்தான் புரியும் என்று சொல்வார்கள், எனக்கு இப்போது நன்றாக புரிந்துவிட்டது. இனிமேல், எனது வட்டத்தை சுருக்கிக் கொள்ளவேண்டும். மிகவும் நம்பிக்கையானவர்களிடம் மட்டுமே கதை சொல்லவேண்டும். 
 

நீங்க இப்போ உதவி இயக்குனராக வேலை பார்க்குறீங்க. இதுவரை யாரிடமெல்லாம் வேலைப் பார்த்திருக்கிறீர்கள்?
 

விஜய் சேதுபதியின் ’றெக்க’ படத்தில் முழுமையாக வேலைப் பார்த்தேன். அதன்பிறகு வெங்கடேஷ் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் பெயர்வைக்காத, படத்திலும் வேலை பார்த்தேன். அதில் வேலை பார்க்கும்போதுதான் என்னுடைய கதைக்காக தயாரிப்பாளரைத் தேடிக்கொண்டிருந்தேன்.
 

அட்லீ இன்னும் உங்ககிட்ட பேசலையா?
 

இல்லை, நான் இவ்வளவு பேசுறேன், நான் பேசுவதில் அவர்கள் எதை ஏத்துக்குறாங்க, எதை மறுக்குறாங்கன்னு தெரிஞ்சுக்க எனக்கே ரொம்ப ஆர்வமாக இருக்கு. நாங்க எப்படா உன்கிட்ட பேசினோம், என்னடா ஆடியோ இருக்குன்னு பொய்சொல்ற என்றெல்லாம் கேட்க மாட்டாங்களான்னுக் கூட தோணுது.
 

அவர்களிடமிருந்து நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?
 

நான் அவங்ககிட்ட கேட்டது எனக்கு இந்த படத்தில் ஒரு அசோசியேட் கிரெடிட் கொடுங்க, என் நாலேஜ்படி ரெண்டு சீன் திரையில் வந்தாலே எனக்கு சந்தோஷம்தான். அவங்க பெரிய ஆளுங்க, அவங்கள பகைச்சுக்கிட்டா நான் வேலைக்கே ஆகமாட்டேன். இந்த மையிண்ட் செட் நவம்பர் மாதமே எனக்கு இருந்துச்சு. அவங்க கிட்ட எனக்கு அசோசியேட் கிரெடிட் கொடுங்க, நான் வேலைப் பார்க்கிறேன்னு ரிக்வஸ்ட் பண்ணிதான் கேட்டேன். இறங்கி பணிவா பேசினதும் இவன் ஒன்னும் இல்லாதவன், எவ்ளோ நேரம் நிற்கவச்சாலும் நிப்பான், எவ்வளவு அலையவச்சாலும் அலைவான் என்கிற எண்ணம் அவங்ககிட்ட வந்துடுச்சு.
 

விஜய் இந்த பிரச்சனைக்காக பேசினால் எதாவது தீர்வு கீடைக்கும்னு நினைக்குறீங்களா?
 

விஜய் எதுக்காக பேசனும்? அவருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? ஒரு டைரக்டர் விஜய்யிடம் கதைச் சொன்னால் அதை இவர்தான் யோசிச்சாரா, இது யாருடையக் கதை என்பதையெல்லாம் விஜய் ஆராய்ச்சி செய்யமுடியாது. அது அவரது வேலை இல்லையே.
 

ராஜா ராணி படத்தில் இருந்தே அட்லீ மேல இதுமாதிரியான குற்றச்சாட்டு இருக்கு. அது உங்களுக்கு சாதகமாக அமையுதா?
 

ஆரம்பத்திலேயே இதற்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது. நான் சொல்வதை அஜித், விஜய் என்ற கோணத்தில் பார்க்கவேண்டாம். பில்லா படத்தை அஜித் ரீமேக் உரிமை வாங்காமல் வேறொரு பெயரில் எடுத்திருக்கலாம், அப்போது அதை பில்லா ரீமேக் என்று சொல்லியிருப்பீர்களா? அல்லது அஜித் நடித்த இன்னோரு படம் என்று சொல்லியிருப்பீர்களா? நான் இங்கிருந்து ரீமேக் உரிமம் வாங்கி இப்படித்தான் படத்தை எடுத்தேன் என சொல்லுகிற அவர்களின் நேர்மை, ஏன் இவங்க கிட்ட இல்லை. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாவற்றிலும் உங்கள் பெயரையே போட்டுக்கொள்ளவேண்டும் என ஏன் நினைக்குறீங்க? கதை யாருடையதோ அவங்களுக்கு ஒரு கிரெடிட் கொடுங்க, இயக்குனர் இடத்தில் உங்கள் பெயரைப் போட்டுக்கோங்க. அப்படித்தான் இப்போ நிறைய இயக்குனர்கள் இருக்கிறார்கள்.
 

யார் பேசினால் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள்?
 

நான் சிலரின் பெயரை சொல்லமுடியாது. நவம்பரிலிருந்தே நான் சில பெரிய முகங்களிடம் உதவிக்காக போனேன். என் பிரச்சனையைச் சொல்லி எனக்கு கிரெடிட் மட்டும் வேண்டும் சார், நீங்க கொஞ்சம் அவங்ககிட்ட பேச முடியுமா என்றுக் கேட்டேன். அதற்கு அவர்கள் நீங்க என்கிட்ட இது சம்பந்தமாக பேசியதை யாரிடமும் சொல்லவேண்டாம், நானும் சொல்லமாட்டேன்னு சொல்லுவாங்க. அவங்களே இப்படி சொல்லிட்டாங்களே, நம்மால் என்ன செய்யமுடியும்? பேசமால் இதை விட்டுவிடலாம், அமைதியாக வீட்டில் இருந்துவிடலாம் என்றுகூட யோசித்தேன். அதையெல்லாம் தாண்டித்தான் பிரச்சனையைக் கோர்ட்டுக்கு கொண்டுபோனேன்.
 

ஒரு முறைக்கூட அட்லீ உங்களிடம் நேரடியாக பேசவில்லையா?
 

அவர்கிட்ட வேலை பார்க்கிறவர்கள் அதற்கு விடுவதில்லை. என்கிட்ட இவ்வளவு பேசுறீங்க, வேற இடங்களில் கதை சொல்ல வைக்கிறேன்னு சொல்லுறீங்க இதையெல்லாம் அட்லீயை பேச சொல்லுங்கன்னு கேட்டுப்பார்த்தேன். இல்ல, அவர் பிஸியா இருக்கார், நானே உங்களுக்காக பேசுறேன், ஒன்னும் பிரச்சனையில்லைன்னு சமாளிச்சாங்க.
 

தளபதி 63 படத்தின் கதை உங்களுடையது என்பதற்கான ஆதாரம் என்ன?
 

எல்லா ஆதாரங்களையும் கோர்ட்டில் கொடுத்துருக்கேன். அதில் எல்லாம் தெளிவாக உள்ளது. தொடர்ந்து அட்லீ தரப்பிலிருந்தும் நிறைய அப்டேட்ஸ் வரத்தான் போகிறது. அதுவும் என் கதையும் எந்தளவுக்கு ஒத்துப்போகுது என்பதை நான் சொல்வதைவிட அப்போது நீங்களே தெரிஞ்சுக்குவீங்க. இப்போ நான் சொல்லிடலாம், ஆனால் அது ஸ்பாய்லர் ஆகிடும். அது என்னுடைய நோக்கம் இல்லை. வழக்கு கோர்ட்டில் இருக்கு, அங்கு அதைப்பற்றி சொல்வேன்.
 

வழக்கில் அட்லீ சாதகமாக இது கே.பி.செல்வாவின் கதை இல்லையென்று தீர்ப்பு வந்துவிட்டால் என்ன செய்வீர்கள்?
 

நான் ஒருத்தர்கிட்ட இருந்து கதையைத் திருடினால், அதில் 80 சதவீதத்தை படத்தில் வைத்தால்கூட நான் ஒரு முட்டாள். ஒருத்தர் என்கிட்ட ஒரு கதையைச் சொன்னால் அதை என்னுடைய பார்வையில் மாற்றுவதுதான் திறமை. அப்படி அவர்கள் செய்திருக்கலாம். நான் இந்த வழக்கில் தோற்றாலும், இது என்னுடைய கதையென்றும், அவர்கள் தப்பு பண்ணியிருக்காங்க என்றும் எனக்குத்தெரியும். அதனால், கண்டிப்பாக மன்னிப்புக் கேட்கவோ, பின்வாங்கவோ மாட்டேன்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்