
கரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழ்நாட்டில் மீண்டும் திரையரங்குகளை மூட அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழ்நாட்டில் அனைத்து திரையரங்குகளும் மீண்டும் மூடப்பட்டன. மறுஉத்தரவு வரும்வரை திரையரங்குகளைத் திறக்கக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், ரிலீசுக்குத் தயாராக உள்ள புதிய படங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக புதிய படங்கள் ஓடிடியில் வெளியாகிவருகின்றன. அந்தவகையில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'பூமிகா' படம் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி விஜய் டிவியில் 'பூமிகா' படம் ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷின் 25வது படமாக உருவாகியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் ரதீந்திரன் ஆர். பிரசாத் இயக்கியுள்ளார். த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க மலைப் பகுதிகளில் நடைபெற்றுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள இப்படத்தின் ட்ரைலர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ள 'பூமிகா' படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வைரலாகிவருகிறது.