கமல்ஹாசன் தயாரித்து, நடித்து மற்றும் இயக்கி கடந்த 2000ஆம் ஆண்டு வெளியான படம் 'ஹே ராம்'. இப்படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான், ஹேம மாலினி, ராணி முகர்ஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார். இந்தியப் பிரிவினை மற்றும் நாதுராம் கோட்சேவால் மகாத்மா காந்தி படுகொலையானதை சித்தரிக்கும் வகையில் உருவாகியிருந்த இப்படம் பல சர்ச்சைகளையும் கிளப்பியது. பின்பு ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று இன்று வரை பலரின் ஃபேவரட் படமாக அமைந்தது. மேலும் 73வது ஆஸ்கர் விழாவில் இந்தியா சார்பாக 'சிறந்த சர்வதேச திரைப்படம்' பிரிவிற்கு அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் கமல்ஹாசன் தற்போது 'ஹே ராம்' படம் உருவான விதம் பற்றி கூறியுள்ளார். இதனை காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியுடன் சமீபத்தில் உரையாடல் நடத்தியபோது பேசியுள்ளார். அவர் பேசுகையில், "நான் காந்தியைப் பற்றி இப்போது அதிகம் பேசி வருகிறேன். ஆனால் ஆரம்பத்தில் நான் அப்படியில்லை. எனது தந்தை காங்கிரஸ் கட்சியில் இருந்தார். நான் இளவயதில் என் சூழல் காரணமாக காந்தியை மிகவும் விமர்சித்திருக்கிறேன். என் தந்தை, பெரிதாக ஒன்றும் சொல்லமாட்டார். வரலாற்றைப் படி என்பார். அவர் ஒரு வக்கீல், இருந்தாலும் இந்த விஷயத்தில் என்னிடம் வாதிடமாட்டார்.
பின்பு எனது 24, 25 வயதில் காந்தியைப் பற்றி படிக்க ஆரம்பித்தேன். அவரது மிகப்பெரிய ரசிகனாகவே மாறிவிட்டேன். உண்மையில் நீங்கள் உங்களை மாற்ற விரும்பினால், முதலில் மன்னிப்பு கேளுங்கள் என்பது என் கருத்து. காந்தியிடம் மன்னிப்பு கேட்கும் விதமாகத்தான் ஹே ராம் படத்தை உருவாக்கினேன். அப்படத்தில் நான் ஒரு கொலையாளியாக நடித்திருப்பேன். காந்தியைக் கொள்ள முயலும் ஒருவனின் கதை. காந்தியை நெருங்க நெருங்க அவர் பற்றி அந்தக் கொலையாளி தெரிந்துகொள்கிறான். உண்மையையும் புரிந்து கொள்கிறான். அதனால் அவன் மாறிவிடுகிறான். அந்த மாற்றம் கொஞ்சம் தாமதமாக நேரிடுகிறது.
ஆனால் அவன் செய்ய நினைத்ததை வேறொருவன் செய்து விடுகிறான். இருப்பினும் அவன் மனம் மாறிவிடுகிறது. இதுதான் ஹே ராமின் கதை" என்கிறார். குறுக்கிட்ட ராகுல் காந்தி, "இது உங்களின் யோசனையா" எனக் கேட்க, "ஆம். இதுவே என் தந்தையிடம் நான் கேட்கும் மன்னிப்பு" என்று பதிலளித்துள்ளார் கமல்.