அமெரிக்க இசைத்துறையில் மிக உயரிய விருதுகளில் ஒன்று 'கிராமி விருது'. 61 வருடங்களாக நடைபெற்று வரும் விருது விழாவில், இந்த வருட விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியல் அண்மையில் வெளியானது.
உலகளவில் பிரபலமான பாப் பாடகர் ஜஸ்டீன் பீபரின் நான்கு ஆல்பங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன. இந்நிலையில், இந்தப் பட்டியல் வெளியான சில மணி நேரங்களில், ஜஸ்டின் பீபர் விழாக் குழுவினருக்குக் கடிதம் ஒன்றை எழுதி, அதைத் தனது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
அதில், “என்னுடைய திறமையைக் கண்டுணர்ந்து பரிந்துரை செய்தமைக்கு நான் தலைவணங்குகிறேன். நான் என்னுடைய இசை குறித்து மிகவும் கவனத்துடன் செயல்பட்டு வருகிறேன். அந்த வகையில் ஒரு 'ரிதம்ஸ்' அண்ட் 'ப்ளூஸ்' வகை ஆல்பம் ஒன்றை உருவாக்கினேன். என்னுடைய ‘சேஞ்சஸ்’ ஆல்பம் 'ஆர்' அண்ட் 'பி' வகையைச் சேர்ந்தது. ஆனால் அது 'பாப்' பிரிவில் பரிந்துரைக்கப்பட்டது எனக்கு விநோதமாக உள்ளது.
நிச்சயமாக எனக்கு பாப் இசை மிகவும் பிடித்தமான ஒன்றுதான் என்றாலும், இந்த முறை இதை நான் அதற்காக உருவாக்கவில்லை. எனினும் என்னுடைய இசை மீது நீங்கள் வைத்திருக்கும் மதிப்புக்கு நன்றியுடையவனாக இருப்பேன். கிராமி விருதுக்கு என் பாடல்களை பரிந்துரை செய்திருப்பதை கவுரவமாகவும் கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.