
பா.விஜய் இயக்கத்தில் ஜீவா, அர்ஜூன், ராஷி கண்ணா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அகத்தியா’.வேல்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, டத்தோ ராதா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் பிப்ரவரி 28 அன்று தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஜீவா பேசுகையில், “இந்த படத்தின் கதையை இயக்குநர் பா விஜய் என்னிடம் சொல்லும் போது அவரிடம் 'சங்கிலி புங்கிலி கதவை திற' என்ற ஒரு ஹாரர் படத்தில் நடித்து விட்டேன்' என சொன்னேன். கதையை முழுவதும் கேட்ட பிறகு ஹாரர் என்பது கதை சொல்வதற்காக பயன்படும் ஒரு கருவியாக மட்டுமே இருந்தது. இந்தியாவில் மட்டும் தான் இது போன்ற மிக்ஸ்டு ஜானரில் படங்கள் உருவாகும். வெளிநாடுகளில் ஹாரர் படம், ரொமான்டிக் படம் என ஒவ்வொன்றும் ஜானர் அடிப்படையில் இருக்கும். பா. விஜய் 'அகத்தியா' படத்தை இந்திய ரசிகர்கள் ரசிக்கும் வகையில் மிக்ஸ்டு ஜானரில் தான் உருவாக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தில் ஒரு நல்லதொரு மெசேஜும் இருக்கிறது. இந்த விஷயம் மக்களை சென்றடைந்தால் நன்றாக இருக்கும் என எண்ணினோம். அதற்காக ஹாரர் - திரில்லர் - காமெடி - ஆக்ஷன்- அனிமேஷன்- ஃபேண்டஸி- இவற்றின் கலவையாக அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் குறிப்பாக குழந்தைகளுக்கும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த படம் உருவாகி இருக்கிறது. குழந்தைகள் முதன்முறையாக தமிழில் இப்படி ஒரு சர்வதேச தரத்துடன் கூடிய கிராபிக்ஸ் காட்சிகளையும் அனிமேஷன் கதாபாத்திரங்களையும் கண்டு ரசிப்பார்கள்.
படத்தின் கிளைமாக்ஸ் முக்கியமானதாக இருக்கும். ஒரு வருடம் காத்திருந்த பிறகு அண்மையில் தான் அந்த கிளைமாக்ஸ் காட்சிகளை பார்த்தோம். உண்மையில் வியந்து போனோம். இயக்குநர் பா. விஜய் கடினமாக உழைத்திருக்கிறார். அவருடைய விடாமுயற்சிக்காக அவரை நான் மனதார பாராட்டுகிறேன். இது போன்ற பிரம்மாண்டமான பொருட்செலவில் படத்தை தயாரிக்க வேண்டும் என்றால் நாங்கள் உடனடியாக வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பாளரான ஐசரி கணேஷை தான் சந்திப்போம். அந்த வகையில் இந்த படத்தின் கதையை அவரை வீட்டில் சந்தித்து சொன்னோம்.
கதையை முழுவதுமாக கேட்டு உடனே தயாரிப்பதற்கும் ஒப்புக் கொண்டார். அந்தத் தருணத்திலேயே இந்த படத்திற்காக நாங்கள் படமாக்கியிருந்த காட்சிகளை அவருக்கு காண்பித்தோம். எங்களுடைய இந்த அணுகுமுறையும் அவருக்கு பிடித்திருந்தது. உண்மையிலேயே ஏராளமாக பொருட்செலவு செய்து தான் படத்தை தயாரித்திருக்கிறார். படத்தின் உருவாக்கத்தின் போது எந்த சமரசம் இல்லாமல் இயக்குநருக்கு முழு சுதந்திரம் கொடுத்தார்.
இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். அவர்தான் இந்த படத்தின் விதை. அவரைச் சார்ந்து தான் இப்படத்தின் கதை நகரும். நாங்கள் தற்காலத்திலும், அவர் 1940களிலும் இருப்பார். அவர் உருவாக்கிய ஸ்கேரி ஹவுஸ் மூலமாகத்தான் கதை பயணிக்கும். நானும், நடிகர் ராஷி கண்ணாவும் இரண்டு ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கிறோம். அவர் எனக்கு இந்தி திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக பிராமிஸ் கொடுத்திருக்கிறார்” என்றார்.