ரவி, 2003-ஆம் ஆண்டு வெளியான 'ஜெயம்' படத்தின் மூலம் தமிழ் திரைத்துறைக்கு அறிமுகமானார். இப்படத்திற்கு கிடைத்த வரவேற்ப்பை தொடர்ந்து ரவி என்ற இவரது பெயரை ரசிகர்கள் 'ஜெயம் ரவி' என அழைக்கத் தொடங்கினர். பின்பு தொடர்ந்து 'எம்.குமரன் சன் ஆஃப் மகாலக்ஷ்மி', 'உனக்கும் எனக்கும்', 'தீபாவளி', 'தனி ஒருவன்' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைக் கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். தன் வித்தியாசமான கதை தேர்வின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ஜெயம் ரவி, மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படத்தில் அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடித்துமுடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனிடையே தனது 25-வது படமாக 'பூமி' படம் கடந்த ஆண்டு வெளியானது. இதனைத் தொடர்ந்து தற்போது 'அகிலன்', 'இறைவன்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஜெயம் ரவி திரையுலகிற்கு அறிமுகமாகி 19 ஆண்டுகள் கடந்துள்ளது. இதனை முன்னிட்டு தன் ட்விட்டர் பக்கத்தில் ஜெயம் ரவி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் "எல்லாம் நேற்று தான் நடந்தது போல் தெரிகிறது! என் முதல் படமான 'ஜெயம்' படத்துக்காக முதல்முறையாக கேமராவை எதிர்கொண்ட நினைவு இன்னும் என் நினைவில் இருக்கிறது. இன்று, நான் 19 வருடங்களை நிறைவு செய்துள்ளேன். இது ஒரு மேஜிக் போல் தெரிகிறது" என ஆரம்பித்து தந்தை, தாய், சகோதரர் ராஜா மற்றும் மனைவி ஆர்த்தி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், "இயக்குநர்கள், சக நடிகர்கள். தொழில்துறை நண்பர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நன்றி, எனது சிறந்த படைப்புகளை பாராட்டத் தவறாத. அதே நேரத்தில், அவர்களின் நேர்மறையான விமர்சனங்களால் எனது வாழ்க்கையை மேம்படுத்த உதவிய பத்திரிகை-ஊடகச் சகோதரர்கள் மற்றும் சமூக ஊடகத் துறையில் நண்பர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது ரசிகர்களின் நிபந்தனையற்ற அன்பும் ஆதரவும் எனது திறமையை வளர்த்ததோடு மட்டுமல்லாமல், சிறந்த படைப்புகளை வழங்குவதற்கு நிறையப் பொறுப்புகளை என்னுள் விதைத்துள்ளது. என்றென்றும் பேரன்புடன், உங்கள் ஜெயம் ரவி" என உருக்கமுடன் குறிப்பிட்டு பலருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
#19YearsOfJayamravi 🙏🏼 pic.twitter.com/Obp9xerd89— Jayam Ravi (@actor_jayamravi) June 21, 2022