உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த வைரஸால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இதனிடையே பலரும் மக்களுக்குத் தங்களால் முடிந்த அளவுக்கு உதவி வருகின்றனர். பல நடிகர்கள் தங்களின் அறக்கட்டளை வாயிலாக மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அளித்து வருகின்றனர்.
இந்த நெருக்கடியான சமயத்தில் ஒருசில பிரபலங்கள் முடங்கியிருக்கும் சினிமாத்துறைக்கு உதவி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் ஆண்டனி தனது சம்பளத்தில் 25% குறைத்துக்கொண்டார். ஹரிஷ் கல்யான் தனது சம்பளத்தில் 50% குறைத்துக்கொண்டார். இதுபோல பலரும் சூழ்நிலை அறிந்து செயல்பட்டு வருகின்றனர்.
இதனிடையே விஷ்ணு விஷால் தயாரிப்பில் எஃப்.ஐ.ஆர் என்ற தலைப்பில் உருவாகிவந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் படக்குழுவுக்கு முழு சம்பளத்தை கொடுத்து கரோனா லாக்டவுன் நாட்களில் பார்த்துக்கொண்டார் விஷ்ணு விஷால்.
இதனைதொடர்ந்து இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரபல யூ-ட்யூப் விமர்சகர் பிரசாந்த் இந்த படத்திற்கான தனது சம்பளத்தில் பாதி தந்தால் போதும் என விஷ்ணு விஷாலிடம் தெரிவித்துவிட்டதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.