திரைப்படத் தயாரிப்பாளரும், நடிகரும், திரைப்பட இயக்குநருமான கே.ராஜனை நாம் சந்தித்தோம். அப்போது அவர் கூறியதாவது, "நான் ஸ்கூலில் டான்ஸ் பண்ணுவேன். பதிபக்தினு ஒரு படம் ரிலீஸ் ஆச்சு. ஒரு நாள் எங்க அம்மா, டீ கடையில போய் எதாவது சாப்பிடுன்னு சொல்லி ஒரு 25 பைசா தந்தாங்க. இந்தக் காச எடுத்துட்டு நான் தியேட்டர் போயிட்டேன். பதிபக்தி பார்க்கும் போது சிவாஜி கணேசனின் நடிப்பு மிகப் பிரமாதம். அன்றைக்கு இருந்த அமெச்சூர் நாடகங்கள் எல்லாம் என்னை வந்து 200 மேடைக்கு மேல டான்ஸ் ஆட கூப்பிடுவாங்க.
நடிக்க ஆரம்பிச்சேன். படத்துல சின்ன சின்ன வேஷம் பண்ண ஆரம்பிச்சேன். பிறகு நண்பன் வந்து ப்ரைன்-வாஷ் பண்ணி 83-ல படம் எடுக்க வச்சான் பிரம்மச்சாரிகள்-னு. அதுல எனக்கு ஆன மொத்த செலவே ஆறு லட்சம் தான். எஸ்.வி.சேகர், நான் ஒரு ஹீரோ, ஒய்.ஜி.மகேந்திரன், சுரேஷ் எல்லாரும் அந்த படத்துல நடிச்சிருந்தோம். அது எனக்கு பெரிய லாஸ் ஆகிடுச்சு. அப்போ ஸ்கூல் டீச்சர் நான். எனக்கு படம் எடுக்குற தகுதியிலாம் கிடையாது. ஒன்லி நாணயம் மட்டும் இருந்தது. எனக்கு மூன்று குழந்தைகள். நான்காவதா பொண்ணு பொறந்தது. தினமும் அழுவேன்; கோயில் கோயிலா பொய் அழுவேன். கடன்காரனாகிட்டேன்.
அப்புறம், நான் என் வாத்தியார் வேலையை ரிசைன் பண்ணி; எம்.எல்.ஏ. எலக்சன்ல நின்னு; பிறகு துணி வியாபாரம் பண்ணி; அப்படியே ரைஸ் ஆகி 90-ல புரொடியூசர் ஆகி 'நம்ம ஊரு மாரியம்மா' னு ஒரு படம் எடுக்கறேன். அதுல சரத்குமார் வில்லன். அந்தப் படம் எனக்கு ஆறு லட்சம் லாபம் கொடுத்துச்சு. அன்னைக்கு ஆறு லட்சம் லாபம்ங்கிறது பெரிய விஷயம். படத்தயாரிப்பே 21 லட்சம். இப்ப அந்தப் படம் தயாரிக்கணும்னா 2 அல்லது 2.50 கோடி ஆகும். நான் சிக்கனமா பண்ணுவேன். எது தேவையோ அந்த செலவ மட்டும் தான் பண்ணுவேன்.
அநாவசிய செலவ வச்சிக்க மாட்டேன். அப்படித்தான் நானு புரொடியூசர் ஆனவன். கார்ப்பரேட் கம்பெனிகள் வந்த பிறகு தான் சினிமாவோட ஸ்டைலே மாறிப்போச்சு. இப்ப எங்கள போன்ற புரொடியூசர் படம் எடுத்தா, கதை என்ன; இதை எடுக்க எவ்வளவு செலவு ஆகும்; இதுல ஹீரோவுக்கு எவ்வளவு சம்பளம்; நடிகை சம்பளம்; A டூ Z கணக்குப் போட்டு, இது சரியா வரும்னா, அந்த ஹீரோவப் போடுவோம். இல்லைனா போட மாட்டோம். கார்ப்பரேட் கம்பெனி என்ன பண்ணாங்க.. ஒரு ஹீரோ ஹிட் ஆகிட்டாங்கன்னா அவங்கள கொத்திக்கறான். எங்களுக்கு அவன் கிடைக்கிறதில்ல. நாங்க கஷ்டப்பட்டு ஹீரோ ஆக்குவோம். ஆனா, அந்த ஹீரோ நமக்கு கிடைக்கமாட்டாரு. ஒரு கோடி வாங்கனவனுக்கு 10 கோடி கொடுப்பான்.
இயற்கையான செலவுகளைத் தாண்டி செயற்கையான செலவுகள் அதிகமாகிடிச்சி. 10 லட்சம் வாங்கறவன் படம் ஹிட் ஆச்சுன்னா ஒரு கோடிங்கிறான். மனசாட்சியே இல்ல. அநியாயம் பண்றாங்க. அதான் எனக்கு வருத்தம். அதனாலதான் பெரிய லாஸ் வந்து புரொடியூசர் காணாம போறாங்க. என்னுடைய 500 டிஸ்ட்ரிபியூட்டர்ல 300 பேர் வறுமையில வாடுறாங்க" என்றார்.