வைரலாகி வரும் 'இமைகளோ' ஆல்பம் பாடலில் பங்குபெற்ற அர்ச்சனா ரவிச்சந்திரன் உடன் ஒரு சிறப்பு நேர்காணல்...
அனைத்தையுமே நம்மால் கற்றுக்கொள்ள முடியும் என்பதால் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். சமந்தாவிடம் மன உறுதி, நயன்தாராவிடம் அர்ப்பணிப்பு என்று ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொன்றை நாம் கற்றுக்கொள்ளலாம். கற்றுக்கொள்ள எப்போதும் நாம் தயாராக இருக்க வேண்டும்.
சிறுவயதில் நான் அதிகம் வெளியே சென்றது கிடையாது. என்னுடைய பெற்றோரும் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் தான். அவர்களுக்கு இருந்தது நியாயமான பயம் தான். தலைமுறைகள் மாறும்போது இதுவும் மாறும் என்று நம்புகிறேன். முதலில் என்னுடைய பெற்றோர் என்னை நடிக்க அனுமதிக்கவில்லை. என்னுடைய திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்கிற ஆர்வம் எனக்கு எப்போதும் இருந்தது.
பள்ளி ஆண்டு விழா மற்றும் கல்லூரி கல்ச்சுரல்ஸ் ஆகியவை தான் என்னுடைய திறன்களை வெளிப்படுத்த எனக்குக் கிடைக்கும் வாய்ப்பு. என்னால் சாதிக்க முடியவில்லை என்றால் மீண்டும் படிப்புக்கு வந்துவிடுகிறேன் என்று நான் சொன்னதை என் பெற்றோர் ஏற்றுக்கொண்டனர். ஆதித்யா டிவியில் விஜே ஆனேன். அதன் பிறகு விஜய் டிவி என்று பயணம் சென்றுகொண்டிருக்கிறது. உடன் பணிபுரிந்த எல்லாருமே 90ஸ் கிட்ஸ் என்பதால் தான் இந்தப் பாடலுக்காக 90ஸ் கிட்ஸின் மனநிலையில் நகைச்சுவையாக ஒரு ப்ரோமோ வீடியோ வெளியிட்டோம்.