பிரபல பாடலாசிரியர் கவிஞர் காமகோடியன்(76) காலமானார். தமிழ் சினிமாவில் 1000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ள இவர் எம்.எஸ் விஸ்வநாதன், இளையராஜா, தேவா,எஸ்.ஏ.ராஜ்குமார், பரத்வாஜ், யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட மூன்று தலைமுறை இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். கடந்த 2002 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான 'மௌனம் பேசியதே' படத்தில் இவர் எழுதிய "என் அன்பே என் அன்பே..." பாடல் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது.
இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக கவிஞர் காமகோடியன் நேற்றிரவு (5.1.2022) உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் கவிஞர் காமகோடியன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இசையமைப்பாளர் இளையராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "கவிஞர் காமகோடியன் அவர்கள் நேற்றிரவு உடல்நலமின்றி காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். அவரை எனக்கு "வரப்பிரசாதம்" திரைப்படத்தில் வேலைசெய்யும் போதே, தயாரிப்பு மேலாளராக பணியாற்றியதின் மூலம் நன்றாகவே தெரியும். அப்பொழுதே தனக்கு தமிழ்ப்பாடல்களை எழுதுவதில் ஆர்வம் இருப்பதாக கூறியிருந்தார். அவர் நம்முடைய எம்.எஸ்.வி அண்ணாவுடன் மிக நெருங்கிய தொடர்பிலும் இருந்தார். மேடை கச்சேரிகளில் கவிஞர் காமகோடியான் எழுதிய "மனிதனாயிரு" என்ற தனிப்பாடலை எம்.எஸ்.வி அண்ணாவும் பாடியது இன்னும் என் நெஞ்சில் நிழலாடுகிறது. என்னுடைய இசையமைப்பிலும் பல பாடல்களை சிறப்பாக எழுதியிருக்கிறார். அன்னார் மறைவு நம் தமிழ்திரையுலகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரைப் பிரிந்து வாடும் கவிஞரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த என் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் கவிஞரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.