66வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகளை வழங்கி வருகிறது. வருடா வருடம் இந்த விருது அறிவிப்பு ஏப்ரல் மாதம் நடைபெற்று மே மாதம் 3ஆம் தேதி விருதுகள் வழங்கப்படும் ஆனால், இந்த வருடம் பொதுத் தேர்தல் நடைபெற்றதால் இது தள்ளிவைக்கப்பட்டு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சிறந்த நடிகைக்கான விருதை ''மகாநதி (நடிகையர் திலகம்)'' படத்திற்காக நடிகை கீர்த்தி சுரேஷ் பெற்றுள்ளார். மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும், தமிழில் 'நடிகையர் திலகம்' என்ற பெயரிலும் வெளியான இப்படத்தில் சாவித்திரியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விருதை கீர்த்தி சுரேஷிற்கு வழங்கியதற்கான காரணத்தை தேர்வு குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி, 'ஒரு வாழ்க்கை வரலாற்று படத்தின் வெவ்வேறு காலகட்டங்களுக்கு ஏற்ற வகையில், பலவிதமான உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தியதற்காக' இந்த தேசிய விருதை கீர்த்தி சுரேஷிற்கு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.