சசிகுமார் நடிப்பில் இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் கடந்த மார்ச் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘அயோத்தி'. பெரிதளவு ப்ரொமோஷன் இல்லாமல் வெளியான இப்படம் ரசிகர்களின் வரவேற்பின் மூலம் பலரது கவனத்தை பெற்றது. இப்படத்தின் 50வது நாள் விழா சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட சசிகுமார் பேசியதாவது “இந்தப் படம் ஓடிடிக்கு விற்றதால் அவசரமாக வெளியிட வேண்டிய சூழ்நிலை. எந்த புரமோசனும் செய்யவில்லை. ஆனால் தயாரிப்பாளர் ரவீந்திரன் முடிந்த அளவு நிறைய தியேட்டர்கள் போடுகிறேன் என்று அவரால் முடிந்த அத்தனையும் செய்தார். படம் வெளியானதே நிறைய பேருக்கு தெரியவில்லை. ஆனால் பத்திரிகை நண்பர்கள் பாராட்டி எழுத ஆரம்பித்த பிறகு பலர் கவனிக்க ஆரம்பித்தார்கள். மக்கள் தங்கள் படமாக கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். இந்தப் படம் குறித்து இயக்குநர் மந்திரமூர்த்தி சொன்னபோதே இதன் ஆழம் எனக்கு புரிந்தது.
இந்தப் படத்தை மகேந்திரன் சாருக்கும், பாலு மகேந்திரா சாருக்கும் போட்டுக் காட்ட எனக்கு ஆசை. அவர்கள் இருந்திருந்தால் கண்டிப்பாக காட்டியிருப்பேன். மகேந்திரன் சார் நண்டு என ஒரு படம் எடுத்தார். அதில் இதே போல் இந்தி கதாபாத்திரங்கள் இந்தியில் பேசுவார்கள். அப்போதே அதைச் செய்துவிட்டார், ஆனால் தயாரிப்பாளர் ஒத்துக்கொள்ளாததால் அது படத்தில் வரவில்லை. இந்தப் படம் மூலம் அவர் ஆத்மா சாந்தியடையும். படம் பார்த்துவிட்டு நிறைய பிரபலங்கள் பாராட்டினார்கள். ரஜினி சார் ஃபோன் செய்து பாராட்டினார். நண்பர் சிம்பு பாராட்டினார். ஒரு நல்ல படம் என்ன செய்யும் என்பதை இந்தப் படம் காட்டியுள்ளது. நான் இனிமேல் எந்த மாதிரி படம் செய்ய வேண்டும் என்று சொல்லியுள்ளீர்கள். எல்லோருக்கும் நன்றி” என்றார்.