ஹரி இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, ராதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'யானை' திரைப்படம் ஜூலை 1ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இயக்குநர் ஹரி பேசுகையில், “நான் எப்போதுமே மக்களுடன் மக்களாக இருக்கக்கூடியவன். கடந்த மாதம் ரோட்டில் என்னைப் பார்த்தபோது இப்ப என்ன படம் சார் பண்ணுறீங்க என்று கேட்டார்கள். டேய் என்னடா யானைனு அவ்வளவு பெரிய படம் பண்ணிக்கிட்டு இருக்கேன், என்ன படம் பண்ணுறீங்கனு கேட்குறீங்களேனு நினைச்சேன். ஆனால், யானை ட்ரைலர் வெளியானதுமே சார் படம் எப்ப ரீலிஸாகும் என்று கேட்க ஆரம்பித்தார்கள். தமிழ்நாடு முழுவதும் மக்களோடு மக்களாகச் சென்று படத்தை விளம்பரப்படுத்தியுள்ளோம். அதற்குத் துணை நின்ற அனைவருக்கும் நன்றி.
விக்ரம் படம் ஓடிய திரையரங்கைப் பார்த்தபோது 800 பேரில் 500 பேர் குடும்ப ரசிகர்களாக இருந்தார்கள். அதைப் பார்க்கும்போதே ரொம்பவும் சந்தோசமாக இருந்தது. சினிமா எப்போதும் போல ஸ்ட்ராங்காக இருக்கிறது என்ற நம்பிக்கை வந்தது. பிற மொழி படங்கள் ஹிட்டானதும் தமிழ் இயக்குநர்கள் எல்லாம் அதுபோல படம் எடுக்கமாட்டீங்களா என்று சிலர் கிண்டல் பண்ணினார்கள். அதை உடைத்தெறியும் விதமாக விக்ரம் படம் இருந்தது.
யானை படத்திற்கு நிறைய பப்ளிசிட்டி கிடைத்திருப்பதைப் பார்க்க முடிகிறது. படம் வெளியாக இன்னும் ஒருநாள்தான் உள்ளது. குடும்பத்தோடு வந்து கொஞ்சம் கூட முகம் சுழிக்காமல் பார்த்து ரசிக்கக்கூடிய படமாக யானை இருக்கும். அனைவரும் திரையரங்கிற்கு வந்து பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு படம் பிடிக்கும்” எனத் தெரிவித்தார்.