'பூவரசம் பீப்பீ' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் ஹலீதா ஷமீம். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 'சில்லுக் கருப்பட்டி'. ஆந்தாலஜி வகைத் திரைப்படமாக எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அப்படத்தைத் தொடர்ந்து, ஹலீதா ஷமீம் இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள படம் 'ஏலே'. தயாரிப்பாளர் சசிகாந்த் உடனிணைந்து புஷ்கர் - காயத்ரி தயாரித்துள்ள இப்படம், காதலர் தினத்தையொட்டி பிப்ரவரி 12-ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் இயக்குநர் ஹலிதா ஷமீமோடு நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் உரையாடினோம். அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் பின்வருமாறு...
"நான் முதன்முதலில் எழுதிய கதை இதுதான். இந்தக் கதையை சொல்லணும்னு நீண்ட நாட்களாக காத்திருந்தேன். 2009, 2014-ஆம் ஆண்டு என இருமுறை இந்தப் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு அமைந்தது. வேறு சில காரணங்களால் அப்போது முடியாமல் போனது. புஷ்கர் - காயத்ரிக்கு இந்தக் கதை முன்னாடியே தெரியும். ரிலையன்ஸ் எண்டர்டெயின்ட்மென்ட், ஒய் நாட் ஸ்டூடியோவோட இணைந்து பண்ணுவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு அமைந்தது. அப்படித்தான் இந்தப் படம் துவங்கியது. அன்று என்ன கதை எழுதினேனோ அதை அப்படியே படமாக்கியுள்ளோம். சமகாலத்திற்கு ஏற்ற மாதிரி சில விஷயங்கள் சேர்த்துள்ளோம். படம் வெளியான பிறகு அதில் நடித்துள்ள குணச்சித்திர கதாபாத்திரங்கள் அனைவரும் பேசப்படுவார்கள். படத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் என்று யாருமே இல்லை. அனைவருமே அந்த கிராம மக்கள்தான். படம் பார்க்கும்போது அந்த யதார்த்த தன்மை கண்கூடாகத் தெரியும்.
சமுத்திரக்கனி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரோட 'சுப்ரமணியபுரம்', 'அப்பா', 'விசாரணை' படங்களைப் பார்த்து நான் அதிகம் வியந்ததுண்டு. குழந்தைகள் கூட நடிப்பது ரொம்ப அலாதியானது. குழந்தைகள் ஷூட்டிங் ஸ்பாட்ல சமுத்திரக்கனி சாரோட பயங்கர நெருக்கமாக இருந்தாங்க. அந்த ஊர் மக்களும் சமுத்திரக்கனி சாரோட நல்லா பழகுனாங்க. படத்துல நடிச்சிருக்கிற அந்த ஊர் மக்களும் பயங்கர அர்ப்பணிப்போட இருந்தாங்க. போட்ருக்க ட்ரெஸ்ஸ அவங்களே துவைச்சு காயப்போட்டு, மறுநாள் அதே ட்ரெஸ்ஸோட தயாரா வந்துருவாங்க. யாரவது மாற்றி போட்டு வந்தால் அவங்களுக்குள்ளயே கண்டுபிடிச்சு சொல்லுவாங்க. எது நல்ல படமென்பதற்கு பல விஷயங்கள் கூறுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை நல்ல படமென்றால், தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தாமல் மக்களிடம் போய் சேருகிற படம்தான் நல்ல படம். அப்படிப்பட்ட படங்களைத் தொடர்ந்து இயக்கி வருகிறேன் என நான் நினைக்கிறேன்".