Skip to main content

"நான் சிரிக்க அவர்தான் காரணம்..." - கெளதம் மேனன் நெகிழ்ச்சி

Published on 25/11/2019 | Edited on 26/11/2019

தமிழ் திரைப்பட உலகில் சமீபமாக கோலோச்சி வரும் தயாரிப்பு நிறுவனம் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல். வேல்ஸ் பல்கலைகழகத்தின் வேந்தர் ஐசரி கணேஷ் பல ஆண்டுகளாக தமிழ் திரைப்படங்களை தயாரித்து வந்தாலும் சமீபமாக 'வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்' என்ற பெயரில் தயாரித்து வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற படங்கள் 'எல்.கே.ஜி' மற்றும் 'கோமாளி'. இந்த இரண்டு படங்கள் மற்றும் அவர்களது இன்னொரு தயாரிப்பான 'பப்பி' ஆகிய மூன்று படங்களின் வெற்றி விழா சென்னையில் 24.11.2019 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு படங்களில் பணியாற்றிய கலைஞர்களுக்கு நினைவுப் பரிசை வழங்கினார்.

 

gowtham menon with vels isari ganesh

 

jada AD



இந்த விழாவில் இயக்குனர் கெளதம் மேனன் பங்கேற்றார். கெளதம் மேனன், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் 'ஜோஷ்வா... இமை போல் காக்க' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஐசரி கணேஷின் உறவினரான வருண், நாயகனாக நடித்து வருகிறார். கெளதம் மேனன் இயக்கி, சில வருடங்களாக வெளிவராமல் பல பிரச்சனைகளை சந்தித்து நின்ற 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தை சமீபத்தில் தன் கையில் எடுத்து பிரச்சனைகளை தீர்த்து நவம்பர் 29 அன்று படம் வெளியாகுமென்று அறிவித்துள்ளார்.


வேல்ஸ் வெற்றி விழாவில் கலந்துகொண்ட கெளதம் மேனன், ஐசரி கணேஷின் இந்த உதவியை குறிப்பிட்டு நெகிழ்ச்சியாகப் பேசினார். "நான் பொதுவா, என் வேலையில் இருக்கும் கஷ்டங்கள், துக்கங்கள், அழுத்தம் எதையும் வீட்டுக்குக் கொண்டு செல்ல மாட்டேன். வீட்டுக்குப் போயிட்டா என் குடும்பத்தினருக்கான ஆளா மாறிடுவேன். ஏன்னா, என் வீட்டில் உள்ளவங்க அப்படி. ஆனா, வீட்டை விட்டு வெளிய வந்து செய்யும் வேலையில், நான் ரசிச்சு, சிரிச்சு வேலை பார்த்து ரொம்ப நாளாயிடுச்சு. அதான் உண்மை. ஆனால், சமீப காலமா இந்த ரெண்டு மாசமா, நான் சிரிச்சு ரசிச்சு வேலை செய்வதற்குக் காரணமாக இருக்கும் ஐசரி கணேஷ் சாருக்கு என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். நான் மட்டுமல்ல, என் டீமும் சிரிக்கக் காரணமானவர் அவர். 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் இன்னும் சில தினங்களில் ரிலீஸ் ஆகுது. ஐசரி கணேஷ் சார் இல்லைன்னா இது நடந்திருக்காது. அவர் முயற்சியில்தான் இது நடக்கிறது" என்று கூறினார்.                              

 

 

சார்ந்த செய்திகள்