கள்ள நோட்டுப் புழக்கம் தொடர்பான விசாரணையின்போது கருப்பினத்தைச் சார்ந்த ஜார்ஜ் ப்ளாய்ட் என்னும் நபர் போலீஸாரால் கழுத்து நெருக்கப்பட்டு கொல்லப்பட்டார். இதனை அடுத்து கருப்பினத்தவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கு முடிவு காண வலியுறுத்தி அமெரிக்கா முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. இதற்குப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் ஜார்ஜ் ப்ளாய்டின் மரணத்திற்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தோளின் நிறத்தை வைத்து இந்தியாவில் நடக்கும் கசப்பான விஷயங்கள் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் 'பேட்ட' மற்றும் 'மாஸ்டர்' பட நாயகி மாளவிகா மோகனன். அதில், “எனக்கு 14 வயது இருந்தபோது, என்னுடைய நண்பர் என்னிடம், அவரின் அம்மா டீ குடிக்க விடுவதில்லை என்று சொல்வார், ஏன் என்றால் டீ குடித்தால் தோலுடைய நிறம் கருப்பாகிவிடும் என்கிற வித்தியாசமான நம்பிக்கை அவர்களிடம் இருந்தது. ஒருமுறை நான் அவர் வீட்டில் இருந்தபோது, என் நண்பர் டீ கேட்டார். அதற்கு அவருடைய அம்மா, என்னைக் கைகாட்டி “டீ குடித்தால், இவர் மாதிரி நீ கருப்பாகிவிடுவாய்” எனச் சொன்னார். எனக்கு அதிர்ச்சி ஆகிவிட்டது.
என் ஃப்ரெண்ட் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர், கோதுமை கலரில் இருப்பார். நான் மாநிறமான தோல் உடைய மலையாளப் பெண். அது வரை எனக்கு என்னோட ஸ்கின் கலர் பற்றி எந்த அபிப்ராயமும் இருந்ததில்லை. ஆனால், அவர் அப்படிச் சொன்னதும் எனக்கு ஒரே குழப்பமா இருந்தது, காரணம் யாரோ ஒருவர் என்னோட தோல் நிறத்தைப் பற்றி கமெண்ட் செய்தது அதுதான் முதல் முறை.
நம்முடைய சொந்த சமூகத்தில் சர்வ சாதாரண இனவெறி, நிறபேதம் அனைத்தும் இருக்கிறது. வட நாட்டில் கருப்புச் சருமமுள்ள நபரை ‘காலா’ என்று சொல்வது ரொம்ப சாதாரணமாக எடுத்துக்கப்படுகிறது. தென்னிந்தியர்களுக்கு எதிராக வட இந்தியர்கள் இதுமாதிரி மேம்போக்கான பாரபட்சமான கருத்து வைத்துள்ளார்கள். கருப்பாக இருக்கிற இந்தியர்களைக் காமெடியாக ‘மதராஸி’ எனச் சொல்கிறார்கள். சில விசித்திரமான காரணங்களால் இந்த ஜனங்க தென்னிந்தியர்கள் அனைவருமே கருப்பாக இருப்பார்கள் என நினைக்கின்றார்கள்.
வடகிழக்கு இந்தியர்கள் ‘சிங்கி’ என அழைக்கப்படுகிறார்கள், எல்லா கறுப்பின மக்களையும் சர்வ சாதாரணமாக ‘நீக்ரோக்கள்’ எனச் சொல்லி விடுகிறார்கள் வெள்ளையா இருப்பவர்கள் அழகு, கருப்பா இருப்பவர்கள் அசிங்கம் என நினைக்கின்ற போக்கு இந்தச் சமூதாயத்தில் எப்பவும் இருக்கிறது.
உலகம் முழுக்க இருக்கிற இப்படிப்பட்ட இனவெறி குறித்து நாம் பேசும்போது, நம்மளைச் சுற்றி, நம் வீடுகளிலேயும், நம் நட்பு வட்டத்திலேயும், நம் சமுதாயத்திலும் என்ன நடக்கிறது எனத் தெரிந்துகொள்ள வேண்டும். இது பற்றியான விழிப்புணர்வோடு வெளிப்படையாகவும், ரொம்ப நுட்பமாகவும் இனவெறியையும் நிறபேதத்தையும் முறியடிக்க நம்மளுடைய பங்கை நாம் செய்ய வேண்டும். தினசரி வாழ்க்கையில் உங்களை அழகாக்குவது உங்க சருமத்தினுடைய நிறம் இல்லை - எந்தளவிற்கு நீங்கள் அன்பா, கனிவா, நல்லவரா இருக்கின்றீர்களோ அதான் அழகு” என்று நீண்ட பதிவைப் பதிவிட்டுள்ளார்.