நடிகர் கஞ்சா கருப்பு சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மூங்கில் ஊரணி அருகே கீழகொம்புக்காரனேந்தலில் உள்ள கந்தசாமி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நடைபெறும் திருவிழா மற்றும் பால்குட விழாவில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமிக்காக தீச்சட்டி எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவர் பேசுகையில், "இந்த கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்தது. அப்போதே வர வேண்டியது. படப்பிடிப்பில் இருந்ததால் வர முடியவில்லை. அதனால் இந்த மண்டல பூஜையில் கலந்து கொண்டுள்ளேன். இதைத் தொடர்ந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அக்னி சட்டி எடுக்க போகிறேன். எதுக்காகனா, எடப்பாடி பொதுச்செயலாளராக பொறுப்பேற்றதுக்கும் அடுத்த முதலமைச்சராக பொறுப்பேற்பதற்கும் தான்.
இது மட்டுமில்லை. கூடிய விரைவில் நல்ல ஆட்சி அமையும். உங்களுக்கு நேர்மையான ஆட்சி வரப்போகுது. முக்கியமாக ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். தப்பாக நினைத்து கொள்ளாதீர்கள். எடப்பாடி ஆட்சி அமைத்தார் என்றால் இன்று கரெண்ட் பில் எல்லாம் ஏறி இருக்காது. இன்றைக்கு அது பயங்கரமா ஏறிடுச்சு. வீட்டு வரி எல்லாம் அதிகரிச்சுடுச்சு. அதனால் நிச்சயம் எடப்பாடி ஆட்சி புரிவார்" என்றார்.
பின்பு ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு, "எல்லாருமே சீக்கிரம் ஒன்றாக சேர போறாங்க. அனைவரும் நம்ம கட்சி ஆளுங்க தான். பங்காளிக்குள்ள சண்டை இருக்கும். அடிச்சிக்குவோம் பிடிச்சிக்குவோம். நாளைக்கு ஒன்றாக சேர்ந்துடுவோம்" என பதிலளித்தார்.