
இசையமைப்பாளர் இளையராஜா சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்தில் தன்னுடைய அனுமதி இன்றி தனது பாடல்களை பயன்படுத்தியதாகப் பட தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டிஸ் அனுப்பியிருந்தார். அதற்கு முன்பாக மஞ்சும்மெல் பாய்ஸ், கூலி உள்ளிட்ட பல்வேறு பட தயாரிப்பு நிறுவனங்களுக்கு காப்புரிமை தொடர்பாக நோட்டிஸ் அனுப்பியிருந்தார். இந்த விவகாரம் பேசு பொருளாகவே இருந்து வரும் சூழலில் இளையராஜாவின் தம்பி இயக்குநர் கங்கை அமரன் இந்த விவகாரம் தொடர்பாக பேசியுள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “கதாசிரியர்களுக்கு கதையில் உரிமை உண்டு. எத்தனை மொழியிலும் அந்த கதையை மாற்றினாலும் அவர்களுக்கு உண்டு. ஆனால் பாடல்களில் அவர்களுக்கு சம்பந்தம் இல்லை. ஏனென்றால் அது தனி உருவாக்கம். அன்னக்கிளி பட சமயத்தின் போது அப்பட பாடல்கள் நிறைய விற்றது. ஆனால் அது எங்களுக்கு தெரியவேயில்லை. அதனால் இளையராஜா, அதன் பிறகு ஒப்பந்தம் போடும் போது இசை சம்பந்தமான ஒப்பந்தத்தை அவர் வாங்கிவிடுவார். அதற்காக சம்பளத்தை கூட குறைப்பதற்கு தயாராக இருப்பார். அதே போல் கச்சேரியில் பாடுபவர்களுக்கு ராயல்டி கேட்கமாட்டார்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ரூ.7 கோடி சம்பளத்துக்கு ஒரு மியூசிக் டைரக்டரை புக் பன்றாங்க. ஆனால் அவர்கள் போடுற பாட்டை விட நாங்க போட்ட பாட்டுதான் கைதட்டல் பெறுகிறது. அப்போது அதற்கான கூலி எங்களுக்கு வர வேண்டும் அல்லவா. அனுமதி கேட்டால் கொடுத்து விடுவோம். கேட்காமல் போடுவதுதான் இளையராஜாவுக்கு கோவம் வருகிறது. பணம் மேல் ஆசை இல்லை. அது கொட்டி கிடக்குது. ஆனால் எல்லாம் முறைப்படி நடக்க வேண்டும். இசையமைப்பாளர்கள் எங்கள் பாட்டை பயன்படுத்த வேண்டாம், அதற்கு பதில் அவர்களே அது போன்ற ஒரு இசையை உருவாக்க வேண்டும். அப்படி அவர்களை ஊக்குவிப்பதற்கான முயற்சி தான் இந்த ராயல்டி விஷயம்” என்றார்.