அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் அதிபர் பதவிக்கு குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்தலில் இருவருக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என கூறப்பட்டு வரும் நிலையில் இரண்டு வேட்பாளர்களும் தொலைக்காட்சியில் விளம்பரம், சமூக ஊடகங்கள், வலைதளங்கள் என அனைத்து வகையிலும் தங்களது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் தேர்தல் தொடர்பான தனது கருத்துக்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் ட்ரம்ப், நேற்று, “வட கரோலினா பற்றிய முக்கியமான தேர்தல் அப்டேட்டுகளை உங்களுக்கு அனுப்புகிறேன். நவம்பர் 5 ஆம் தேதிக்குள் டொனால்ட் டிரம்பிற்கு வாக்களிக்கத் தயாராக உள்ளீர்களா என்பதை உறுதிப்படுத்துங்கள்” என்று பதிவிட்டிருந்தார். மேலும் அந்த பதிவில் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களின் சில கணக்குகள் டேக் செய்யப்பட்டுள்ளது. இது தவறுதலாக நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் ட்ரம்ப் அஜித் ரசிகர்களின் ஒரு எக்ஸ் பக்கத்தை டேக் செய்துள்ளார். இதனைப் பார்த்த அஜித் ரசிகர்கள் விடாமுயற்சி அப்டேட் கொடுத்தால் உங்களுக்கு வாக்களிக்கிறோம் என ட்ரம்பை கிண்டல் செய்து வருகின்றனர். இது குறித்தான பதிவுகளும் மீம்ஸுகளும் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அஜித்குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.