
கட்டப்பா புகழ் நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் பிரபல தனியார் மருத்துவமனையில் ஊட்டச்சத்து மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர் சினிமாவில் நடிக்க ஆவலாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில் இது குறித்து பேசிய திவ்யா சத்யராஜ்..."தற்போது பரவி வரும் தகவலில் உண்மை ஏதும் இல்லை. கடந்த 7 ஆண்டுகளாக சென்னையில் உள்ள இரு மருத்துவமனைகளில் ஊட்டச்சத்து மருத்துவராக நான் பணியாற்றி வருகிறேன். மேலும் ஊட்டச்சத்து குறித்த பிஎச்.டி உயர் படிப்பிலும் கவனம் செலுத்தியிருக்கிறேன். எனக்கு சினிமாவில் நடிக்க விருப்பம் இல்லை மேலும் சினிமா மீது எனக்கு அதீத மரியாதை உண்டு. அடிக்கடி படங்கள் பார்த்து ரசிப்பேனே தவிர, படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஊட்டச்சத்து சம்பந்தப்பட்ட ஒரே ஒரு ஆவணப்படத்தில் மட்டுமே நடித்திருக்கிறேன். ஆனால் அது திரைப்படம் இல்லை" என்றார்.