'பிச்சைக்காரன் 2' படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. திரைப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக இயக்குநர் சசி கலந்து கொண்டு சிறப்பித்தார். இப்படத்தின் நாயகன் விஜய் ஆண்டனியும் இயக்குநர் சசியும் இருவரும் கலந்து கொண்டு பேசிய ஜாலியான உரையாடல் நிகழ்வு நடைபெற்றது.
விஜய் ஆண்டனி: சசி சார்தான் இசையமைப்பாளராக என்னை அறிமுகப்படுத்தியவர். பிச்சைக்காரன் படம் நீங்கள் எனக்குப் போட்ட பிச்சை. எத்தனை படம் செய்தாலும் பிச்சைக்காரன் போல் ஒரு படம் கிடைக்காது. அந்தக் கதையை நீங்கள் மிகச்சிறந்த முறையில் உள்வாங்கி உருவாக்கினீர்கள்.
சசி: அந்தக் கதையைப் பலரிடம் நான் சொல்லி ஓகே ஆகவில்லை. ஆனால் உங்களுக்கு அந்தக் கதை புரிந்தது. சாதாரண ஒரு மனிதனின் டேஸ்ட் விஜய் ஆண்டனிக்கு இருக்கிறது. அதுதான் அவருடைய இவ்வளவு பெரிய வெற்றிக்கு காரணம். இந்தப் படத்தை இயக்கும்போது உங்களுக்கு எந்த அளவு தடுமாற்றம் இருந்தது? அதை எப்படி சமாளித்தீர்கள்?
விஜய் ஆண்டனி: எனக்கு இந்தப் படத்தை இயக்குவதில் முதலில் விருப்பம் இல்லை. நீங்கள் இந்தப் படத்தை இயக்க வேண்டும் என்று காத்திருந்தேன்.
சசி: உண்மைதான். இந்தப் படத்தை நான் இயக்க வேண்டும் என்று விஜய் ஆண்டனி நீண்ட காலம் காத்திருந்தார். வேறு ஒரு படத்தில் நான் கமிட்டானதால் இந்தப் படத்தை என்னால் இயக்க முடியவில்லை.
விஜய் ஆண்டனி: அதன் பிறகுதான் நான் இந்தப் படத்தை இயக்க முடிவு செய்தேன். கதை எழுதிவிட்டேன். ஆனால் முதல் 10 நாட்கள் படம் என் கண்ட்ரோலுக்கு வரவில்லை. இந்தப் படத்தின் மூலம்தான் இயக்கம் குறித்து கற்றுக்கொண்டேன். படம் நன்றாக வந்திருக்கிறது. கிட்டத்தட்ட பிச்சைக்காரன் முதல் பாகத்தின் காப்பிதான் இது. சின்னச் சின்ன மாற்றங்கள் செய்துள்ளேன்.
சசி: இந்தப் படத்துக்காக விஜய் ஆண்டனி என்னிடம் எந்த கண்டென்டும் வாங்கவில்லை. வெற்றி பெறுவதற்கான தகுதி அவரிடம் இருந்ததால்தான் அவர் இந்தப் படத்தையே தொடங்கியிருக்கிறார். நிச்சயமாக அவர் நல்ல படத்தை எடுத்திருப்பார் என்கிற நம்பிக்கை இருக்கிறது.