நடிகரும் இயக்குநருமான சரவண சக்தி, நடிகர் விமலை நாயகனாக வைத்து ‘குலசாமி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதற்கிடைய, 'எங்க குலசாமி' என்ற பெயரில் புதிய படம் ஒன்று உருவாகி வருவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இது தொடர்பாக இயக்குநர் சரவண சக்திக்கும் தயாரிப்பாளர் சிங்காரவேலனுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சரவண சக்தியிடம் நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் பேசினோம்.
உங்களுக்கும் சிங்காரவேலனுக்கும் என்ன பிரச்சினை?
நான் நடிகர் விமலை வைத்து ‘குலசாமி’ என்ற படத்தை இயக்கி வருகிறேன். அதே கதை மற்றும் டிசைனைப் பயன்படுத்தி சிங்கார வேலன் சார், அவரோட அலுவலகத்தில் உள்ள ஒரு பையனை வைத்து 'எங்க குலசாமி' என்ற பெயரில் போஸ்டர் வெளியிட்டார். அவர் சிம்பு பட தயாரிப்பாளர்னு எல்லாருக்கும் தெரியும். அவர் அவசர அவசரமா இப்படி செய்வதற்கு என்ன அவசியம். இது தனிப்பட்ட முறையில் விமல் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி மட்டுமே. அதை ‘குலசாமி’ படத்தின் மீது காட்டுவது எந்த விதத்தில் நியாயம். ‘குலசாமி’ படத்தின் வாங்கும் மற்றும் விற்கும் உரிமை விக்னேஷ் என்பவரின் வசம் உள்ளது. அதை மீறி யாரும் வாங்கினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்போம் என ஒரு பொதுநல அறிவிப்பு ஒன்றும் விக்னேஷ் என்பவரின் பெயரில் வெளியிடப்பட்டது. சிங்காரவேலன் சார் அலுவலகத்தில் உள்ள விக்னேஷிடம் இதுகுறித்து கேட்க நான் நேரில் சென்றேன். இந்த அறிக்கையை நான் கொடுக்கவே இல்லை என்று அவர் கூறிவிட்டார். நான் இதை கேட்கும்போது கொஞ்சம் கோபத்துடன் சத்தமாகக் கேட்டேன். அதைத் தொடர்ந்து, சிங்காரவேலன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். நான் என் தரப்பு விளக்கங்களைக் கொடுத்துள்ளேன். அது போக இயக்குநர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் கொடுத்துள்ளேன்.
இது உங்கள் கதையே கிடையாது. ஆர்.கே.சுரேஷிடம் வேலை பார்க்கும்போது அங்கிருந்து எடுத்துக்கொண்டு வந்தது என்கிறாரே... அது பற்றி?
அப்படி எடுத்துக்கொண்டு வந்தால் ஆர்.கே.சுரேஷ் என்னிடம் கேட்க மாட்டாரா. அவரை வைத்து ஏற்கனேவே ‘பில்லா பாண்டி’ என்ற படத்தை இயக்கியுள்ளேன். அடுத்து படம் இயக்குவதற்காகக்கூட அவரிடம் பேசிக்கொண்டுள்ளேன். என்ன வேண்டுமானாலும் பேசலாம்... ஆனால், உண்மை என்று ஒன்று இருக்குல.
இந்தப் படத்திற்கான கதையை விஜய் சேதுபதி எழுதுவதாகக் கூறப்பட்டது. பின் எப்படி சரவண சக்தி உரிமை கொண்டாட முடியும் என்கிறாரே?
விஜய் சேதுபதி கதை எழுதுவதாக விளம்பரம் கொடுத்தது நான்தான். உதாரணத்திற்கு கூறுகிறேன்... இந்தக் கதை என்னுடையதாக இல்லாமலே இருக்கட்டும். நான் ஹீரோவிற்கு கொடுத்த ஒரு டிசைனைத் தூக்கி, அவருடைய ஆஃபீஸ் பையனுக்கு கொடுத்து, அதே டிசைனை வெளியிடுவது ஏன்?. அது தவறுதானே. நான் முன்னரே சொன்னதுதான்... இந்தப் பிரச்சனைக்கு முழு காரணம் விமலுக்கும் சிங்காரவேலன் சாருக்கும் இடையேயான காழ்ப்புணர்ச்சிதான். எனக்கும் அவருக்கும் தனிப்பட்ட முறையில் எந்தப் பிரச்னையும் இல்லை.
‘மனிதன்’ - ‘மாமனிதன்’ என்றெல்லம் படங்கள் வரும்போது ‘குலசாமி’ - ‘எங்க குலசாமி’ என்று படம் வருவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை?
இதை நீங்கள் தயாரிப்பாளர் சங்கத்தில்தான் கேட்க வேண்டும். ‘குலசாமி’ என்று ஒரு படத்திற்குப் பெயர் வைத்தால், ‘எங்க குலசாமி’ என்று வேறு படத்திற்குப் பெயர் வைக்கக்கூடாது என நான் சொல்லவில்லை. தயாரிப்பாளர் சங்கம் கூறுகிறது. ‘துப்பாக்கி’ - ‘கள்ளத்துப்பாக்கி’ என இரு படங்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதே. அது போலத்தான் இதுவும். இது தொடர்பாக நாங்கள் பேசிய அத்தனை விஷயத்திற்கும் என்னிடம் ஆதாரம் உள்ளது.
இந்தப்படம் தவிர்த்து, வேறு சில படங்களுக்கும் இதுபோல புகார் கொடுத்துள்ளாரே... அதற்கு என்ன காரணம்?
அதுவும் விமல் படங்களாகத்தான் இருக்கும். 'களவாணி 2' விமல் படம். 'படவா'னு ஒரு படத்திற்கு அடுத்து பிரச்னை வரும் பாருங்க. தொடர்ந்து விமலைத்தான் டார்கெட் பண்றாங்க. மூன்று வருசமா அவரை மனஉளைச்சலுக்கு ஆளாக்கி ஒரு நல்ல நடிகரை செயல்படவிடாமல் செய்றாங்க.
நீங்கள் அவரது பிறப்பைத் தவறாகப் பேசியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.. அது பற்றி?
நான் இப்போதும் கூறுகிறேன். ஒரு நல்ல கௌரவமான குடும்பத்தில் பிறந்தவன் அடுத்தவனை ஏமாத்தணும்னு நினைக்கமாட்டான்னு சொன்னேன். அதுல என்ன தப்பு இருக்கு. நான் யாரையாவது இதுவரை ஏமாற்றியிருக்கிறேனா? என் மீது யாராவது குற்றம் சொல்ல முடியுமா?. ஆனால், அவர் மீது ஊரே குற்றம் சொல்லுது. நடிகர் சூரி, விமல், இயக்குநர் சற்குணமெல்லாம் அவர் மீது புகார் கொடுத்துள்ளனரே. விருகம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன்ல என் மீது எந்தப் புகாரும் இல்லை. அவர் மீது அத்தனை புகார்கள் உள்ளன.