சென்னையில் நடிகர் கார்த்தி ஒருங்கிணைத்த உழவன் விருது வழங்கும் விழாவில் பல்வேறு திரைப்பிரபலங்கள், அரசியல் ஆளுமைகள் கலந்து கொண்டார்கள். பல்வேறு நபர்களைப் பாராட்டி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் இயக்குநர் பாண்டிராஜ் பேசியதாவது, "நான் விவசாயம் செய்து இந்த வருடம் 114 முட்டை நெல் அறுவடை செய்தேன். விவசாயம் செய்யும் நிறைய பேருக்கு நஷ்டம் ஏற்படுகிறது. விவசாயத்தை பார்க்கும் பார்வையில் லாபமா நட்டமா என்பது உள்ளது. மாற்று விவசாயம் மூலம் விவசாயம் செய்யும் விவசாயிகள் மிக பெரிய அளவில் லாபம் பார்க்கிறார்கள். இந்த வருடம் விவசாயம் மூலம் எனக்கு லாபம். விவசாயத்திற்கு செய்யும் செலவுகளை என்னுடைய மனைவி ஒவ்வொன்றாக கணக்கு எழுதி வைத்து விடுவார்.
நான் இயக்குநராக லட்சம், கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும், நாம் அறுவடை செய்த நெல்லில் இருந்து பெறப்பட்ட அரிசியை சாப்பிடும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கும் திருப்திக்கும் அளவே இல்லை. விவசாயிகள் ஒவ்வொரு முறையும் அடுத்த வருடம் லாபம் பாத்துடலாம் அடுத்த வருடம் லாபம் பாத்துடலாம் என்ற நம்பிக்கையில் விவசாயம் செய்கின்றனர்.நான் ஊருக்கு செல்லும் போது வீட்டிற்கு செல்லலாம் நேராக விவசாயம் செய்யும் இடத்திற்கு தான் செல்வேன். அங்கு விளைந்து இருக்கும் பயிறு, காய்கறி, பழம் போன்றவற்றை சாப்பிடும் போது தான் திருப்பி கிடைக்கும். கிணற்றில் தண்ணீர் இல்லாததால் எங்க அப்பா 10 வருஷமா விவசாயம் செய்வதை விட்டு விட்டார். கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு முன்பாக விவசாயி படும் கஷ்டத்தை படமாக எடுக்க நினைத்தேன்.
என்னுடைய நண்பன், "நீ தேசிய அளவில், ஆசிய அளவில் விருது பெற்று இருந்தாலும், அப்பா அம்மா விவசாயம் செய்த நிலம் காய்ந்து கிடக்கிறது. அப்புறம் எப்படி அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையும்" என்று என்னை சென்டிமென்டா லாக் செய்து விட்டான். அப்பாவும் அம்மாவும் இருட்டு நேரத்தில் தான் வீட்டையே பார்ப்பார்கள். நான் அப்பாவும் அம்மாவும் விவசாயம் செய்த நிலத்தை பார்த்த போது அங்கு ,மது அருந்தியும், சாராயம் காய்ச்சியும் தவறாக பயன்படுத்தி வந்தனர். இதனால் நண்பர்கள் சொன்ன யோசனைகள் எல்லாம் கேட்டு கிணறு வெட்டுவது, போர் போடுவது, வெளி அமைத்தல் என 50 லட்சத்திற்கு மேல் செலவு செய்து விட்டேன். எனக்கு திரை துறையில் இருந்து வரும் வருமானத்தை வைத்து விவசாயத்திற்கு செலவு செய்தேன். ஆனால் விவசாயமே கதி என இருக்கும் விவசாயிகளால் எப்படி முடியும்.
நூறு ரூபாய் போட்டால் 80 ரூபாய் தான் கிடைக்கிறது என்றாலும் நாம் எல்லாம் உணவு உன்ன விவசாயம் செய்து வரும் விவசாயிகளை இந்த உழவன் அறக்கட்டளை மூலம் பெருமை படுத்துவது தான் பெரிய சந்தோஷம். கடைக்குட்டி சிங்கம் போன்று படம் எடுக்க நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் விவசாயிகளை கவுரவ படுத்த தான் ஆட்கள் இல்லை. நடிகர் கார்த்தியின் முதன்மையான விசயமாக உழவன் அறக்கட்டளை ஆரம்பித்ததை பார்க்கிறேன். மத்திய அரசு செயல்படுத்தி வரும் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டம் நல்ல திட்டம் தான். இதன் மூலம் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறார்கள். ஆனால் விவசாயிகளை பொறுத்த வரைக்கும் இது நல்ல விஷயம் இல்லை. இதனால் விவசாயம் செய்ய ஆட்கள் வருவதே இல்லை. நூறு நாள் வேலைக்கு சென்றால் அரை மணி நேரம் மட்டுமே வேலை செய்து விட்டு அங்கே ஊர் வம்பு தான் பேசுகிறார்கள். மத்திய அரசு மாநில அரசுகள் இணைந்து விவசாயிகளுடன் இணைத்து நீதியை பகிர்ந்து அளித்து அவர்களை விவசாய பணிக்கு அமர்த்தினால் விவசாயம் இன்னும் சிறப்பாக நடைபெறும். தமிழ்நாடு அரசு இதைச் செயல்படுத்தினால் ஒட்டுமொத்த விவசாயியும் சந்தோசப்படுவார்கள்." என்றார்.