சிம்புவின் நடிப்பில் இயக்குனர் நந்துவின் இயக்கத்தில் உருவாகி நிதி நெருக்கடியால் வெளியாகாமல் இருக்கும் படம் ‘கெட்டவன்’. இந்த படத்தை தொடர்ந்து இலங்கையில் போர் சூழலின்போது எல்லாளன் என்றொரு படத்தை இயக்கினார். நந்து தற்போது கே.டி. கண்டி என்று பெயரை மாற்றி, ‘டே நைட்’ என்றொரு படத்தை இயக்கியுள்ளார். குறைந்த பட்ஜெட்டில் முழுக்க முழுக்க ஆஸ்திரேலியாவில் எடுக்கப்பட்டுள்ள த்ரில்லர் திரைப்படமான இது ஃபிப் 14ஆம் தேதி வெளியாகிறது. இதன் வெளியீட்டை முன்னிட்டு நமக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்தார் இயக்குனர் என்.கே. கண்டி.
அப்போது சீமானுக்கு மிகவும் நெருக்கமானவரான இவரிடம் சீமான் மீது வைக்கும் விமர்சனங்கள்பற்றி கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு பதிலளித்தவர் “போர் சூழலில் எப்படி இலங்கைக்கு சென்று வந்தீர்கள் என்ற விசாரணை எல்லாம் முழுவதும் எங்கள் மீது நடந்து முடிந்தேவிட்டது. நாங்கள் இலங்கைக்கு செல்லும்போது போர்கால சூழல். படம் எடுக்க வேண்டும் என்றுதான் அழைத்திருந்தார்கள். நாங்கள் அங்கு சென்றபோது போர் தொடங்கியது. அச்சூழலில்தான் ‘எல்லாளன்’ என்கிற படத்தை எடுக்க தொடங்கினோம். போர் என்றால் காஷ்மீரில் வெடிகுண்டு போடப்பட்டது என்று பேப்பரில்தான் படித்திருக்கிறோம். ஆனால், அங்கு அதை உணர்ந்தோம் அப்படிதான் அச்சூழலும் இருந்தது. முதல் நாள் வரை உங்களுடன் பேசிக்கொண்டிருந்தவர் அடுத்த நாள் குண்டடிப்பட்டு இறந்திருப்பார். தமிழ்நாட்டை பொறுத்தவரை வயசாகிதான் சாவோம் ஆனால், அங்கு வயசுக்கு வருவதற்கு முன்பே இறந்துவிடுகின்றனர். அந்த நாட்டினுடைய சூழல் அப்படி.
நீங்கள் இந்த கேள்வி கேட்டதற்கு காரணம் சீமான் அண்ணன் இலங்கை செல்லவில்லை, பிரபாகரனை அவர் பார்க்கவில்லை கதை விடுகிறார் என்றெல்லாம் இங்கு அரசியல்வாதிகள் பேசுகிறார்கள் என்பதற்காகதான் என புரிகிறது. நான் அங்கிருக்கும் கால கட்டத்தில் சீமான் அங்கு வந்து 15 நாட்கள் தங்கியிருந்தார். அதில் மூன்று நாட்கள் மட்டுமே வெளியே தங்கியிருந்தார். மற்ற நாட்கள் முழுவதும் எங்களுடன் தான் தங்கியிருந்தார். அவர் இருந்த சமயத்தில் வான்வெளி தாக்குதல், டிலே தாக்குதல் போன்ற தாக்குதல்கள் நடந்தன. சீமானை வீரமானவர் என்றுதான் சொல்வேன். மேடையில் பேசுவது மட்டுமல்லாமல், அந்த சூழலில் அங்கு வந்து நின்றார்.
15 நாட்கள் சீமான் அங்கிருந்தார். அவர் இருந்த சமயத்தில்தான் ஆகாய தாக்குதல் நடைபெற்றுக்கொண்டிருந்தது. என்னிடம் இப்போது எதுவுமே இல்லை, ஆனாலும் எதாவது செய்வேன் என்ற தமிழனின் விருந்து உபசாரத்தை அப்போதுதான் பார்த்தேன். சீமான் அண்ணனிற்கு கிடைத்த ராஜ உபச்சாரம், அந்த சாப்பாட்டை தயாரித்தவர்களுக்கே கிடைக்கவில்லை. அந்த சூழலில் பாஸ்மதி அரிசி பிரியாணி எல்லாம் செய்தனர். திடீரென ஆமை பிரியாணி செய்து கொடுத்தார்கள். இப்படிதான் இருந்தது. அவ்வளவு பெரிய படத்தை மூன்று பேரால் முடிக்க முடிந்தது. அந்த தைரியத்தில்தான் இரண்டு பேரோடு ஆஸ்திரேலியாவில் படம் எடுத்தேன்” என்றார்.