சென்னை கவிக்கோ அரங்கில் 'தமிழ் சினிமாவில் முஸ்லீம்களின் வாழ்வியல் பதிவுகள்' என்ற தலைப்பிலான கலந்துரையாடல் முன்பு நடைபெற்றது. தமிழ் திரைப்படங்களில் இசுலாமியர்களின் வாழ்வியல் எந்த அளவுக்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, அதில் நடந்த தவறுகள், சார்பு நிலைகள், போதிய அளவு இடம் பெறாததன் காரணம் என பல்வேறு விஷயங்கள் காரசாரமாக நடைபெற்றன. அந்நிகழ்வில் பேசிய இயக்குனர் பாலாஜி சக்திவேல் பலரும் அறியாத ஒரு சுவாரசிய தகவலைப் பகிர்ந்துகொண்டார். அவர் பேசியதிலிருந்து...
"நான் சூரியன் படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றிய போது ஷங்கர் இணை இயக்குனர். அப்போதிருந்தே நான் தனியாக படம் இயக்க எண்ணி ஒரு கதையை தயார் செய்திருந்தேன். அது விஜயகாந்த் - இப்ராஹிம் ராவுத்தர் இருவருக்கும் இடையிலான நட்பை அடிப்படையாகக் கொண்ட கதை. சினிமாவிற்கு வந்த பிறகு அல்லாமல் அதற்கு முன்பே மதுரையில் அவர்கள் கொண்ட நட்பு, அவர்கள் வாழ்க்கை குறித்து மிக உண்மையாக கதை செய்திருந்தேன். அதில் விஜயகாந்தின் தந்தையாக சிவாஜி கணேசன், இப்ராஹிம் ராவுத்தர் பாத்திரத்தில் மம்மூட்டி என பெரிய நடிகர்களை மனதில் வைத்து அந்தக் கதையை உருவாக்கினேன். இந்தப் படத்தில் விஜயகாந்த் நடிக்க வேண்டும் என்பதற்காக பல ஆண்டுகள் முயற்சி செய்தேன். அவரிடம் கதை சொல்ல நேரம் பெறுவதே கடினமாக இருந்தது. அவர் நடித்த 'சக்கரை தேவன்' படத்தில் நான் பணியாற்றினேன். ஒரு வழியாக அவரிடம் கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்தது.
மிக இயல்பான அதே நேரம் படமாகினால் மிக முக்கியமான படமாக இருக்குமாறு அந்தக் கதையை உருவாக்கிய நான், அவரிடம் மிகுந்த உணர்ச்சிவசத்தோடு துடிப்போடு அந்தக் கதையை சொல்லி முடித்தேன். 'கதை நல்லாருக்கு, ராவுத்தர்கிட்டயும் சொல்லுங்க' என்று சாதாரணமாக சொன்னார் விஜயகாந்த். என் மனதில் இருந்த அந்த உணர்வு அவருக்கு ஏனோ செல்லவில்லை. அந்த ஆழம் அவரால் உணரப்படவில்லை என்பது புரிந்தது. ரவுத்தரிடமும் முயற்சி செய்தேன். ஆனால், அப்போது நான் சொன்ன நடிகர் பட்டியல், ஏ.ஆர்.ரஹ்மான் இசை போன்றவற்றை காரணமாகக்காட்டி அந்தப் படம் உடனே நிகழவில்லை. சிவாஜி அவர்களுக்கும் உடல்நிலை சரியில்லை. இப்படி, நான் நினைத்த நடிகர்கள் கிடைக்கவில்லை என்பதால் அந்தப் படத்தை நானே கைவிட்டேன். இந்தக் கதையை நான் லிங்குசாமியிடம் சொல்லியிருக்கிறேன். கேட்ட அவர் உண்மையில் மிரண்டுவிட்டார். 'என்னங்க இது விறுவிறுப்பாகவும் இருக்கு, அதே நேரம் ஒரு வாழ்வியலையும் சிறப்பாக சொல்லியிருக்கு' என்று கூறிப் பாராட்டினார்.
நான் வளர்ந்ததே அப்படிப்பட்ட ஒரு சூழலில்தான். திண்டுக்கல்லில் ஒரு ஸ்டோர் வீட்டில் பொது தண்ணீர் பொது கழிப்பறை என்று மதம் தாண்டித்தான் நாங்கள் வாழ்ந்தோம். வகுப்பில் என் நெருங்கிய நண்பர்கள் இசுலாமியர்கள்தான். அதனால்தான் அப்படியொரு கதையை என்னால் எழுத முடிந்தது. இப்போதும் கதை இருக்கிறது. ஆனால், எடுக்க முடியவில்லை என்பது வருத்தம்தான்."
விஜயகாந்த் - இப்ராஹிம் ராவுத்தர் இடையிலான நட்பு புகழ்பெற்றது. விஜயகாந்தின் வாழ்விலும் வளர்ச்சியிலும் ராவுத்தரின் பங்கு முக்கியமானது. சினிமாவில் தான் வாய்ப்பு தேடும்போது ராவுத்தர் தனக்கு உறுதுணையாக இருந்து செய்த சேவைகளையும் உதவிகளையும் பல தருணங்களில் நெகிழ்ந்து கூறியுள்ளார் விஜயகாந்த். வல்லரசு உள்ளிட்ட சில திரைப்படங்களில் இவர்களது நட்பு வசனமாகவும் வைக்கப்பட்டுள்ளது. நண்பர் ராவுத்தரை ஒரு தயாரிப்பாளராக்கி மகிழ்ந்தார் விஜயகாந்த். பின்னர் ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும் பிரிந்தனர். அரசியலில் விஜயகாந்த் இறங்கிய பின்னர் இடைவெளி இன்னும் அதிகமானது. ராவுத்தர் மறைந்தபோது கண்ணீர் சிந்தி அழுதார் விஜயகாந்த். இந்த நட்பு படமாகியிருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும்.