தன்னுடைய திரையுலக அனுபவங்கள் குறித்து நடிகர் டேனியல் பாலாஜி நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.
முடிந்தவரை வித்தியாசமான வேடங்கள் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். காக்க காக்க படத்தில் நான் நடித்த கேரக்டர் அப்படிப்பட்டது தான். அந்தப் படத்தில் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. வேட்டையாடு விளையாடு படத்தில் இன்னும் வித்தியாசமான கேரக்டர் கிடைத்தது. பொல்லாதவன் படமும் எனக்கு நல்ல பெயரை வாங்கித் தந்த படம். கேரக்டரில் எவ்வளவு தூரம் உண்மைத்தன்மையைக் கொண்டுவர முடியும் என மெனக்கெடுவேன். சில படங்கள் பணத்துக்காக செய்வோம்.
துருவ நட்சத்திரம் படத்திலும் ஒரு கேரக்டரில் நடித்துள்ளேன். அந்தப் படம் விரைவில் வெளிவரும். கௌதம் மேனன், வெற்றிமாறன் ஆகியோருக்கு என்னால் 'நோ' சொல்ல முடியாது. மருதநாயகம் படத்தில் சில நாட்கள் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. கமல் சார் அந்தப் படத்தை அவ்வளவு அழகாக செதுக்கினார். மருதநாயகம் நிச்சயம் மீண்டும் வரவேண்டும். ஸ்டார் நடிகர்களோடு நடிக்கும்போது அதிக வெளிச்சம் கிடைக்கிறது என்பது உண்மைதான். பைரவா படத்தின் இந்தி டப்பிங் வெர்ஷனை வடஇந்தியாவில் அவ்வளவு பேர் பார்த்துள்ளனர்.
சமீபத்தில் காஷ்மீர் சென்றபோது லியோ படப்பிடிப்பில் இருந்த விஜய் சாரை சந்தித்தேன். வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகம் எடுத்தால் அதில் நான் இன்னும் சாகவில்லை என்று காட்டலாம் என்று கௌதம் சாருக்கு ஐடியா கொடுத்தேன். அந்தப் படத்தை நான் இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் கௌதம் சாருக்கு அமுதன் கதாபாத்திரத்தைக் கொடுப்பேன். தற்போது தொழில்நுட்பம் அதிகம் வளர்ந்துள்ளதால் புதுப்புது ஷாட்களை இயக்குநர்கள் கேட்டு வாங்கலாம். ஒரு படம் என்பது இயக்குநரின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு கேரக்டரும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவற்றில் இயக்குநரின் பங்களிப்பும் என்னுடைய பங்களிப்பும் இருக்க வேண்டும். சினிமாக்காரர்கள் சொல்லும் கருத்துக்களுக்கு அதிகம் எதிர்ப்பு வரும். டேனியல் என்கிற பெயரைக் கூட சிலர் சர்ச்சையாக்கினார்கள். அது என்னுடைய இஷ்டம் என்பதை விளக்கினேன். இங்கு பாராட்டுவதற்கு அதிகம் ஆட்கள் இல்லை. குறை சொல்வதற்கு நிறையப் பேர் இருக்கின்றனர். அதை நான் கண்டுகொள்வதும் இல்லை.