
துருவங்கள் பதினாறு இயக்குனர் கார்த்திக் நரேன் அடுத்ததாக அரவிந்த்சாமி, ஸ்ரியோ சரண், ஆத்மிகா ஆகியோரை வைத்து 'நரகாசூரன்' படத்தை சமீபத்தில் இயக்கி முடித்தார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவரது அடுத்த படத்திற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. 'நாடக மேடை' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள அந்த படத்தை கார்த்திக் நரேன் அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான 'நைட் நோஸ்டால்ஜியா பிலிமோடெயின்மெண்ட்' மூலம் தயாரித்து இயக்குகிறார். இந்நிலையில், இந்த படத்தில் நடிக்கவுள்ள கதாபாத்திரங்கள் குறித்த சில தகவல்கள் சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அதன்படி இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் கவுதம் கார்த்திக் மற்றும் காளிதாஸ் ஜெயராம் நடிக்க இருப்பதாகவும், நடிகர் ரகுமான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றவிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.