2019ஆம் ஆண்டு பொங்கல் தினத்தன்று ரஜினியின் 'பேட்ட' திரைப்படத்துடன் வெளியானது அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம். சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், ஜெகபதி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விஸ்வாசம்'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் 'விஸ்வாசம்' படத்துக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. தமிழில் பல திரைப்படங்களின் வசூல் சாதனையைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் வந்தது. நூறு நாட்கள் வரை திரையரங்குகளில் ஓடியது. பின்னர் தொலைக்காட்சியில் வெளியானபோது தமிழ்ப் படங்களின் டிஆர்பி சாதனைகள் அனைத்தையும் முறியடித்து முதலிடத்தைப் பிடித்தது 'விஸ்வாசம்' படம். இந்த நிலையில் 67வது தேசிய விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், சிறந்த இசையமைப்பாளருக்கான விருது 'விஸ்வாசம்' படத்துக்காக இசையமைப்பாளர் டி. இமானுக்கு கிடைத்துள்ளது.
இது பலருக்கு சந்தோஷத்தைக் கொடுத்ததைக் காட்டிலும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது. பெரும்பாலும் தேசிய விருது பட்டியலில் இசைக்கு கொடுக்கப்படும் விருதுகள் கலை படங்களுக்கு இசையமைத்தவர்களுக்கே கொடுக்க முன்னுரிமை அளிக்கப்படும். அந்த வகையில் பார்க்கும்போது, முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக உருவாக்கப்பட்ட 'விஸ்வாசம்' படத்துக்கு இசையமைத்த டி.இமானுக்கு வழங்கப்படுவது ரசிகர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் வரும், 'வேட்டிக்கட்டு', 'அடிச்சி தூக்கு' உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் அவை கமர்ஷியலான 'குத்து' பாடல்களாகவே பார்க்கப்பட்டது. ஆனால், தந்தைக்கும் மகளுக்குமான பாசப்பிணைப்பை அழகாக கண்முன்னே கொண்டுவந்த 'கண்ணான கண்ணே' பாடல் அஜித் ரசிகர்களையும் தாண்டி அனைவருக்கும் பிடித்தமான பாடலாக அமைந்தது.
அதுவே, இந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்கு மிகப்பெரும் காரணமாகவும் அமைந்தது. அதேபோல், இப்படத்தின் பின்னணி இசையும் ரசிகர்களின் மனங்களை வருடியது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் பார்ப்பவர் பலரின் கண்களைக் குளமாக்கியது. அந்த அளவு படத்தோடு ஒன்றவைத்தது டி.இமானின் பின்னணி இசை. இப்படிப் படத்தின் முதல் பாதியில் அதிரடியும், இரண்டாம் பாதியில் நெஞ்சை வருடியும் இசையமைத்த டி இமானுக்கு தேசிய விருது கிடைத்திருப்பது பலருக்கு ஆச்சர்யத்தை அளித்திருந்தாலும், அவர் இப்படத்தின் இரண்டாம் பாதியில் கொடுத்த பின்னணி இசைக்கும், தந்தைகளின் ஆந்தமாகவே மாறிய 'கண்ணான கண்ணே' பாடலைக் கொடுத்ததற்கும், கிடைத்திருக்கும் 'தேசிய விருது' தகுதியானதாகவே பார்க்கப்படுகிறது.