உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை 19,700 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஐந்து லட்சத்தை நெருங்கியுள்ளது. தொடக்கத்தில் இந்தியாவில் அதிகம் பரவாததுபோல இருந்த கரோனா வைரஸ் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதுவரை இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோர் 649 பேர். இதுவரை 13 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர் மற்றும் 43 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்த கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கட்டுக்குள் கொண்டுவர இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து விதமான துறையும் இந்த கரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்ப்பட துறையும் இந்த வைரஸ் பரவலால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் தினக்கூலியை நம்பியிருக்கும் பணியாளர்கள் மிகவும் கஷ்டத்தில் இருக்கின்றனர்.
கஷ்டத்திலிருக்கும் அவர்களுக்கு சினிமாவைச் சேர்ந்த பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும் என்று ஃபெப்சியின் தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் வைத்தார். அதனைத் தொடர்ந்து நடிகர் சிவக்குமார், சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் இணைந்து 10 லட்சம் ரூபாய் கொடுத்தனர். அதன்பின் சிவகார்த்திகேயன் 10 லட்சம், ரஜினிகாந்த 50 லட்சம், விஜய்சேதுபதி 10 லட்சம் நிதி வழங்கினார்கள். இவர்களைத் தொடர்ந்து பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வந்தனர்.
இந்நிலையில் நடிகர் தனுஷ் 15 லட்சம், கமல்ஹாசன் 10 லட்சம் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் 1 லட்சமும் நிதியுதவி அளித்துள்ளனர்.