
கர்நாடகா அரசு சார்பில் 16-வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா கடந்த 1ஆம் தேதி தொடங்கியது. தொடக்க விழாவில் கர்நாடக முதலமைச்சர் சித்தாராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், நடிகர் சிவ ராஜ்குமார், நடிகை பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மார்ச் 8 வரை மொத்தம் 8 நாட்கள் இந்த விழாவில் நடக்கவுள்ளது.
இந்த விழாவில் கலந்து கொள்ள மறுத்ததாக நடிகை ராஷ்மிகா மந்தனாவை காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரவி கனிகா கடுமையாக சாடியுள்ளார். அவர் பேசியதாவது, “கர்நாடகாவில் கிரிக் பார்ட்டி என்ற கன்னட படம் மூலம் தனது சினிமா கரியரை தொடங்கிய ராஷ்மிகா, கடந்த ஆண்டு பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவிற்கு நாங்கள் அழைத்தபோது கலந்து கொள்ள மறுத்துவிட்டார். அவர், ‘எனக்கு ஹைதராபாத்தில் வீடு இருக்கிறது, கர்நாடகா எங்கே இருக்கிறது என்று எனக்குத் தெரியாது. எனக்கு நேரம் இல்லை, வர முடியாது’ என எங்கள் சட்டமன்ற உறுப்பினர் நண்பர்களில் ஒருவர் அவரை அழைக்க 10-12 முறை வீட்டிற்கு சென்ற போது கூறினார். தன்னுடைய கரியரை இங்கு தொடங்கி வளர்ந்தபோதும், கன்னடத்தை அவர் புறக்கணித்துவிட்டார். அதற்கு நாம் பாடம் கற்பிக்க வேண்டாமா?” என்றுள்ளார்.
முன்னதாக தொடக்க விழாவில் பேசிய டி.கே.சிவக்குமார், “நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் யாரும் இந்த உணர்வைப் பகிர்ந்து கொள்ளவில்லை என்றால், சர்வதேச திரைப்பட விழாவின் பயன் என்ன? இதை திரைப்பட சபை மற்றும் அகாடமிக்கு ஒரு எச்சரிக்கையாகவோ கோரிக்கையாகவோ வைக்கிறேன். சினிமா என்பது ஒரு சிலருக்கு மட்டும் அல்ல. அதற்கு அரசாங்க ஆதரவு மிக முக்கியமானது” என்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.