ரஜினிகாந்த் நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நேற்று(10.10.2024) வெளியான படம் ‘வேட்டையன்’. இப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கல்வி மற்று போலீஸ் என்கவுன்டர் குறித்துப் பேசியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
இந்த நிலையில் இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் பள்ளி தொடர்பான காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி சமூக ஆர்வலர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணா என்பவர் இந்த புகாரை கொடுத்துள்ளார். அதில், “படத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி நகரில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களை படம் பிடித்து தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பியதால் சர்ச்சை என்ற வாசகம் இடம் பெற்றிருக்கும். இந்த காட்சிகள் அந்த பள்ளியை சித்தரிப்பதாக இருப்பதால் அதனை நீக்க வேண்டும். இது தொடர்பாக படத்தின் இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து அப்பகுதியின் மக்கள், அரசு பள்ளியை படத்தில் தவறாக சித்தரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில்பட்டியில் உள்ள ஒரு திரையரங்கை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அதன் பிறகு அந்த மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய போராட்டம் நடத்திய ஒருவர், “காந்தி நகர் பள்ளி நல்ல பள்ளி. ஆசிரியர்களும் மாணவர்களும் நல்லவர்கள்தான். இந்த படத்தில் அந்த ஒரு சீனை மட்டும் கட் பண்ணிட்டு திரையிட வேண்டும். இதனால் எங்க பிள்ளைகளுக்கு கேவலமாக இருக்கிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.