லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லியோ'. இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். லலித் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இவரது இசையில் 2 பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் யு/ஏ சான்றிதழுடன் வருகிற 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி முன்பு படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தத் திட்டமிடப்பட்டு பின்பு ரத்தானது. இதற்கு அரசியல் அழுத்தங்களோ அல்லது வேறு காரணங்களோ இல்லை எனப் படக்குழு தெரிவித்தது. இருப்பினும் இது சர்ச்சையானது. அரசியல் காரணங்களால் தான் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக சீமான் மற்றும் சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர்.
இதனை தொடர்ந்து இசை வெளியீட்டு விழா நடக்காததால் ட்ரைலரை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர் ரசிகர்கள். அவர்களை மகிழ்விக்கும் வகையில் நேற்று முன்தினம் மாலை படத்தின் ட்ரைலர் வெளியானது. பல்வேறு இடங்களில் திரையரங்கில் ரசிகர்கள் கண்டுகளிப்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அப்படி சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் ட்ரைலர் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள், திரையரங்கின் இருக்கைகளை உடைத்து சேதப்படுத்தினர். இது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதனிடையே ட்ரைலர் ரசிகர்களின் வரவேற்பை பெற்று தற்போது யூட்யூபில் 37 மில்லியன் பார்வையாளர்கள் கடந்து ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் ட்ரைலரில் விஜய் பேசும் வசனம் ஒன்று தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதை நீக்கக்கோரி புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்து மக்கள் கழகம் சார்பில் சென்னை ஆணையர் அலுவலகத்திற்கு இணைய வழியாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் லியோ இடத்திற்கு எதிராக போராட்டங்கள் அறிவிக்க தயாராக இருப்பதாக புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே அகில் பாரத் இந்து மகா சபா சார்பில் சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், ஆபாசமான கொச்சையான வார்த்தைகள் அனைத்தையும் படக்குழு நீக்கவேண்டும் எனவும், நீக்க தவறினால் எதிர்ப்பை தெரிவிக்கின்ற வகையில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டத்தை அகில் பாரத் இந்து மகாசபாமுன்னெடுக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.