தமிழ் சினிமாவில் சண்டை கலைஞராக அறிமுகமாகி பின்பு தனது காமெடியால் பிரபலமானவர் வெங்கல் ராவ். ஆந்திராவை பூர்விகமாகக் கொண்ட இவர் ரஜினி, அமிதாப் பச்சன், தர்மேந்திரா உள்ளிட்ட பலருக்கும் டூப் போட்டு நடித்துள்ளார். இவர் ஃபைட்டராக பணியாற்றிய காலத்தில், ஒரு சண்டைக் காட்சியின் போது விபத்து ஏற்பட்டு கால் முட்டி, தோள்பட்டையில் அடிப்பட்டது. அதன் பிறகு காமெடி கதாபாத்திரத்தில் கவனம் செலுத்தி வடிவேலு குழுவுடன் இணைந்து 30 படங்களுக்கு மேலாக நடித்தார்.
இதனிடையே வடிவேலு சினிமாவில் இருந்து விலகி இருந்த காலத்தில், அவரது குழுவில் இடம்பெற்ற பலரும் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டனர். அதில் வெங்கல் ராவும் ஒருவர். ஆனால் தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ள வடிவேலு, தன் குழுவில் இருந்த பெரும்பாலானோரை அழைத்து நடிக்க வைத்துள்ளார். அந்த வகையில் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் 'நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தில் வெங்கல் ராவ் நடித்துள்ளார்.
இந்நிலையில் வெங்கல் ராவ், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக விஜயவாடா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீப காலமாக கல்லீரல் கோளாறால் வெங்கல் ராவ் அவதிப்பட்டு வந்துள்ளார். இதன் பாதிப்பு காரணமாக தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் விரைவில் வெங்கல் ராவ் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.