சூர்யா நடித்து வரும் 'சூரரைப் போற்று' படத்தை சுதா கொங்காரா இயக்க, நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்க, ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். கோடை விடுமுறையில் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கரோனா அச்சுறுத்தலால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. முதலில் இப்படத்தை திரையரங்கில்தான் வெளியிடப்படும் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால், திடீரென சூர்யா படத்தினை அமேசான் ப்ரைமில் செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரிவித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தயாரிப்பாளராக அவர் எடுத்துள்ள இந்த முடிவை மற்றவர்கள், அவரது ரசிகர்கள், திரையுலகை சார்ந்தவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இப்படத்தின் ரிலீஸுக்கு வைத்திருந்த ஐந்து கோடி ரூபாய் பணத்திலிருந்து பலருக்கு உதவி செய்ய பகிர்ந்தளிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கு திரையுலகை சேர்ந்த பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வரும் நிலையில்திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்...
"திரைப்படம் என்பது திரையரங்கில் திரையிட்டால்தான் திரைப்படம். அப்படி வளர்ந்து வந்தவர்தான் கன்னியமிக்க திரைப்பட நடிகர் திரு.சிவகுமார், அவரது மகன்கள் திரு.சூர்யா, திரு.கார்த்தி, மருமகள் திருமதி ஜோதிகா. இவர்கள் திரைப்படங்களில் நடித்து இந்திய சினிமா ரசிகர்களின் கைதட்டல் குறிப்பாக ரசிகர் மன்றத்தினர் முதல் காட்சி கொண்டாடுவார்கள். அப்படி வளர்ந்து பல கோடிகள் சம்பளம் வாங்கும் திரு. சூர்யா இந்த கரோனா காலத்தில் அம்பானி முதல் அடிதட்டு மக்கள் வரைக்கும் கஷ்டபடும் நேரத்தில் யாரால் எந்த துறையினரால் வளர்ந்துவந்தோமோ அந்த துறையினருக்கு எதிராக அவர்களை பற்றி எள்ளவும் கவலைப்படமால், அவரை மட்டும் காப்பாத்தும் எண்ணத்தில் ஓடிடிக்கு படம் கொடுப்பேன் என்பது இரக்கமற்ற செயல். கருணை கூர்ந்து அந்த முடிவை மாற்றி கலைத்துறையை காக்கும்படி "காக்க காக்க கனகவேல் காக்க" என்று கேட்டுகொள்கிறோம். ஆர்.மணிகண்டன் செயலாளர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம்" என குறிப்பிட்டுள்ளது.