தற்போதைய காலகட்டத்தின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் கிறிஸ்டபர் நோலன். அண்மையில் கூட அவரது இயக்கத்தில் உருவான டெனட் படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இவர் பேட்மேன் கதாபாத்திரத்தை வைத்து படமும் இயக்கியுள்ளார்.
சமீபத்தில் அவர் அளித்த பெட்டியில் பேட்மேன் குறித்து பேசியுள்ளார். அதில், "பேட்மேன் பிகின்ஸுக்கு முன்னால் டிசி தயாரிப்பு நிறுவனத்திடம் நான் பேசும்போது தெரிந்துகொண்ட முதல் விஷயங்களில் ஒன்று, பேட்மேன் கதாபாத்திரம் என்பது மீண்டும் மீண்டும் விளக்கி சொல்வதை சார்ந்து இருக்கிறது என்பதுதான். ஒவ்வொரு தலைமுறையும் அதற்கான ஒரு புதிய விளக்கத்தை தரும். அதுதான் இந்த கதாபாத்திரத்தை இன்று வரை புதிதாக வைத்திருக்கிறது" என்று நோலன் கூறியுள்ளார்.
தற்போது நோலன் இயக்கத்தில் சர்வதேச நாடுகளில் வெளியாகியுள்ள 'டெனெட்' திரைப்படத்தில் ராபர்ட் பேட்டின்ஸன் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பேட்டின்ஸன் பேட்மேனாக நடிப்பது குறித்து பேசியிருக்கும் நோலன், "அவருடன் பணியாற்றியதை வைத்து இதை முழு நம்பிக்கையுடன் சொல்கிறேன். அவர் கவனம் செலுத்தினால் அவரால் எந்த விதமாகவும் நடிக்க முடியும். பேட்மேனாக அவர் திரையில் எப்படி நடிப்பார் என்பதை பார்க்க நான் ஆர்வமாக இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
பேட்மேன் கதாபாத்திரத்திற்கு பெரும் ரசிகர் கூட்டம் உண்டு, குறிப்பாக பல நாடுகளில் அதற்கு ரசிகர்கள் உருவாக காரணமாக இருந்தவர் கிறிஸ்டபர் நோலன் என்றும் சொல்லலாம்.