Skip to main content

சிறையில் இருக்கும் சந்திரபாபு நாயுடு - ஆறுதல் கூறிய ரஜினி

Published on 13/09/2023 | Edited on 13/09/2023

 

chandrababu Naidu in jail  Rajini consoled to his son

 

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு 2014 ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில், திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ. 300 கோடிக்கு மேல் முறைகேடு செய்ததாகப் புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். இதனால் அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சியைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சந்திரபாபு நாயுடு கைதைத் தொடர்ந்து ஆந்திரா மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக போலீசார் பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தி வைத்திருந்தனர்.

 

அதே சமயம் கைது விவகாரம் தொடர்பான வழக்கில் விஜயவாடா நீதிமன்றத்தில் 8 மணி நேரமாக இரு தரப்பு வாதங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வழங்கப்பட்ட தீர்ப்பில், ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு செப்டம்பர் 22 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஏற்கனவே விசாரணைக்காக சந்திரபாபு நாயுடு அழைத்துச் செல்லப்பட்டபோது மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றதால் போலீசார் அதிகப்படியாக குவிக்கப்பட்டனர். 

 

பல இடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். குறிப்பாகத் தமிழக எல்லையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டது. சந்திரபாபு நாயுடு அவருடைய அரசியல் வாழ்க்கையில் முதல்முறையாகச் சிறைக்குச் சென்றதால், அவரது தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய அளவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. 

 

இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவின் நெருங்கிய நண்பரான நடிகர் ரஜினிகாந்த், அவரது மகனான நாரா லோகேஷை தொலைப்பேசியில் அழைத்து ஆறுதல் கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘சந்திரபாபு நாயுடு தவறு செய்யமாட்டார் என்றும் தன்னலமற்ற பொது சேவை அவரைக் காப்பாற்றும்’ எனவும் ரஜினி கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் விஜயவாடாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ரஜினியும் சந்திரபாபு நாயுடுவும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். அப்போது அவரைப் பற்றி பேசிய ரஜினி, "எனக்கு 30 ஆண்டு கால நண்பர். சந்திரபாபு இந்திய அரசியல் மட்டுமின்றி உலக அரசியல் அனுபவம் வாய்ந்தவர். அரசியலில் அவர் ஒரு தீர்க்கதரிசி" எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்