Skip to main content

"நம்புங்க... நானும் நல்லவன்தான்" - குறும்பு குறையாத பாலாஜி!

Published on 18/01/2021 | Edited on 18/01/2021
biggboss 4 balaji

 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 க்ராண்ட் ஃபினாலே (இறுதிப் போட்டி நாள்) நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பப்பட்டது. வெற்றி பெறப்போவது யார் என்று மக்கள் ஆவலுடன் காத்திருந்து பார்த்தனர். ஆரி, பாலாஜி இருவருக்கும் கடும் போட்டி நிலவிய நிலையில் நீண்ட சஸ்பென்ஸுக்குப் பிறகு வெற்றி பெற்றது ஆரி என்று அறிவித்தார் கமல்ஹாசன். இறுதிப்போட்டி வரை நின்று இரண்டாம் இடத்தை பெற்றிருக்கிறார் பாலாஜி முருகதாஸ்.

 

உடலை கட்டுக்கோப்பாய் பராமரித்து வரும் பாலாஜி, பிக்பாஸுக்கு முன்பே சர்வதேச அளவிலான ஆணழகன் போட்டிகளில் இந்தியாவின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றிருக்கிறார். அப்போது கிடைக்காத ஊடக வெளிச்சம் இந்தப் போட்டியில் கிடைத்தால் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் இந்தப் போட்டியில் கலந்துகொள்வதாகக் கூறியிருந்தார். பிக்பாஸ் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் பாலாஜி சற்று வித்தியாசமானவரும்  அதிரடியானவரும் ஆவார். ஆரம்பத்தில் இருந்தே அவரது வெளிப்படையான பேச்சும் அதிரடியான நடவடிக்கைகளும் பல பிரச்னைகளை உண்டாக்கின. சில நேரங்களில் உடைந்து கலங்கியும் இருக்கிறார்.

 

உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதில் பலவீனமானவராக பார்க்கப்பட்ட பாலாஜி, நிகழ்ச்சியில் கொடுக்கப்படும் டாஸ்க்களிலும் நடத்தப்படும் போட்டிகளிலும் சிறப்பான வியூகம் அமைத்து தொடர்ந்து விளையாடி வந்தார். பிறரிடம் அவர் நடந்துகொள்ளும் விதம் ஒரு பக்கம் விமர்சனங்களை பெற்று வந்தாலும் ஒரு சாராரிடம் வரவேற்பையும் பெற்றது. இவரது நடவடிக்கையை பார்த்து சில வாரங்களிலேயே வெளியேறிவிடுவார் என்று தான் நினைத்ததாக கமலே கூறியிருந்தார்.

 

இப்படியாக இறுதிச் சுற்று வரை வந்து இரண்டாம் இடம் பெற்ற பாலாஜி, மேடையில் பேசும்போது "நான் எனக்கு தோணுனதை எல்லாம் பேசியிருக்கேன், செஞ்சுருக்கேன். கொஞ்சம் கூட எதையும் மறைக்கல. இப்படி இருந்தா ஜெயிப்போம்னு நினைச்செல்லாம் பண்ணல. விளைவுகளை பற்றி கவலைப்படாம செஞ்சிருக்கேன். ஆனா, அப்படி செஞ்சதோட விளைவா நான் இறுதிப் போட்டிக்கு வருவேன்னு தெரிஞ்சிருந்தா இன்னும் நல்லாவே செஞ்சிருப்பேன்" என்று சிரித்துக்கொண்டே கூறினார். "ஆனா ஒன்னு... என்னை நம்புங்க, நானும் நல்லவன்தான்" என்று தனது குறும்பு மாறாமல் கலகலப்பாக முடித்தார்.      

 

சார்ந்த செய்திகள்