Skip to main content

“தமிழர்கள் அப்படியில்லை” - பாக்கியராஜ் வருத்தம் 

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Bhagyaraj about manjummel boys writers review

சசிகலா புரடக்சன்ஸ் நிறுவனம் வழங்கும் தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் தயாரிப்பில், இயக்குநர் நாஞ்சில் இயக்கத்தில், நடிகை ஆண்ட்ரியா முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘கா’. சுந்தர் சி பாபு இசையமைத்துள்ள இப்படம் மார்ச் 29 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் பாக்கியராஜ், ஆர்.வி. உதயகுமார், தயாரிப்பாளர் கே. ராஜன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.  

இயக்குநர் பாக்யராஜ் பேசுகையில், “சசிகலா புரடக்சன்ஸ் எனக்குத் தெரிந்தவர்கள். அதனால் அவர்கள் அழைத்தால் உடனே வந்துவிடுவேன். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். ஆண்ட்ரியா இப்படத்தில் எந்தளவு கடினமாக உழைத்துள்ளார் என இயக்குநர் கூறினார். அவருக்கு வாழ்த்துகள். இயக்குநர் சினிமா என்பது அனுபவம் என்றார். அவர் சொன்னது படம் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டியது. அந்த காலத்தில் வெளிவரும் ரிவால்வர் ரீட்டா போன்ற பெண்கள் நடிக்கும் ஆக்சன் படங்கள் எனக்குப் பிடிக்கும். விஜய சாந்தி இதுபோல் படங்கள் செய்தார். இப்போது ஆண்ட்ரியா ஆக்சன் செய்துள்ளார். பார்க்கும் ஆர்வம் அதிகமாக உள்ளது” என்றார். 

மேலும் மஞ்சும்மல் பாய்ஸ் படம் குறித்து பேசிய அவர், “மஞ்சும்மல் பாய்ஸ் படம் மலையாளத்தை விட இங்குதான் அதிகம் ஓடுகிறது. அடுத்த ஊரில் எடுக்கும் படங்கள் ஓடுகிறது. மக்கள் ரசிப்பதால் தான் ஓடுகிறது. நம்மூர் எழுத்தாளர் அதை காட்டமாக விமர்சித்துள்ளார். அதிலும் படத்தை மட்டுமின்றி கேரள மக்களை விமர்சித்து விட்டார். அது தமிழனுடைய பண்பாடு கிடையாது. நாம் அனைவரையும் பாராட்டி தான் சொல்லுவோமே தவிர இறங்கி விமர்சனம் செய்தது கிடையாது. பெரிய எழுத்தாளர் இப்படி பேசியது மனதுக்கு வருத்தமாக இருக்கிறது. இதை இப்போது சொல்லக் காரணம் தமிழர்கள் யாரும் கண்டிக்கவில்லையே எனக் கேரள மக்கள் நினைத்துவிடக் கூடாது. தமிழர்கள் அப்படியில்லை” என்றார்.

சார்ந்த செய்திகள்