உலகம் முழுவதும் உள்ள மார்வெல் ஃபேன்ஸ் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்திற்காக எதிர்பார்த்து காத்திருந்தனர். கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான இப்படம் தொடக்கம் முதலே வசூலில் வாரிக்குவிக்க தொடங்கியது. வெறும் 11 நாள்களில் டைட்டானிக் வசூலை முறியடித்து இரண்டாம் இடத்தை பிடித்தது. அதற்காக டைட்டானிக் படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனும் மார்வெல் டீமிற்கு வாழ்த்து தெரிவித்தார்.
ஆனாலும், உலகளவில் வசூல் சாதனை படைத்த படங்களின் முதல் வரிசையில் ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் இருந்தது. அதையும் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் முறியடிக்குமா என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அடுத்தடுத்து வெளியான படங்களினால் அவெஞ்சர்ஸ் எண்ட் கேமின் வசூல் குறைந்து பின் தங்கியது.
இந்நிலையில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் மீண்டும் திரைக்கு வர தயாராகியிருக்கிறது. அதை மார்வெல் ஸ்டூடியோஸின் தலைவர் கெவின் ஃபெய்ஜ் உறுதிப்படுத்தியிருக்கிறார். இது குறித்து பேசியுள்ள கெவின், “அது நீட்டிக்கப்பட்ட காட்சிகளாக இருக்காது. படம் முடிவடைந்ததும் கிரெடிட் சீன்களுக்குப் பின்னர் நீக்கப்பட்ட காட்சிகள், சிறிய புகழ் அஞ்சலி, மற்றும் சில ஆச்சரியங்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன” என்றார். வருகிற 28ஆம் தேதி மீண்டும் இந்த படம் அமெரிக்காவில் ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பாக்ஸ் ஆபீஸ் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் தற்போது வரை 2.744 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூல் செய்திருக்கிறது.
அவதார் திரைப்படம் 2.788 அமெரிக்க டாலர்களை வசூல் செய்து முதலிடத்தில் இருக்கிறது. மீண்டும் ரிலீஸ் செய்வதால் மீதம் இருக்கும் 44 மில்லியனை அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் வசூலித்து முதலிடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.