
'காவலன்' படத்திற்கு பிறகு இயக்குனர் சித்திக் நீண்ட நாட்களுக்கு பின் இயக்கியுள்ள படம் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்'. மலையாள ரீமேக்கான இப்படத்தில் நாயகனாக நடிகர் அரவிந்த் சாமியும் நாயகியாக அமலா பாலும் நடித்துள்ளனர். மேலும் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ், பேபி நைனிகா ஆகியோர் முக்கிய நடித்துள்ளார்கள். ரமேஷ் கண்ணா வசனம் எழுதியுள்ள இப்படம் வரும் மே 11ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இதன் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. அப்போது இப்படம் குறித்தும், தன் வருங்கால படங்கள் குறித்தும் நடிகர் அரவிந்த் சாமி பேசும்போது, "அனைவரும் பேசியதுபோல இப்படம் பல தடைகளை தாண்டி விரைவில் வெளியாக இருக்கிறது. படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த முருகன் அவர்களுக்கு நன்றி. படத்தில் ரமேஷ் கண்ணா வசனம் அருமையாக எழுதியுள்ளார். சூரி, ரோபோசங்கர், ரமேஷ் கண்ணா அருமையான நகைச்சுவை காட்சிகளை கொடுத்துள்ளனர். நைனிகா, ராகவன் இரண்டு பேருமே முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து உள்ளனர். அமலா பால் ரொம்பவே நன்றாக நடித்துள்ளார். அம்ரேஷ் இசை, சித்திக் இயக்கம் எல்லாமே அருமையாக இருக்கிறது. தயாரிப்பாளர் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறேன்.
இப்படம் வரும் மே 11 ரிலீஸ் ஆகிறது,கண்டிப்பாக வெற்றியடையும் என்று நம்புகிறேன். நான் எப்போதும் வித்தியாசமான கதைகளில் நடிக்க ஆசைப்படுகிறேன். தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்தேன். அப்படத்தை தொடர்ந்து அந்த கதாபாத்திரம் போலவே பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், நான் அதுபோல் நடிக்க மறுத்துவிட்டேன். ஹீரோ, வில்லன் என்று இல்லாமல், நல்ல கதாபாத்திரம் அமைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். எனக்கு பிடிக்காதது ஹாரர் படம் தான். அதில் நடிக்க மாட்டேன். பார்க்கவும் மாட்டேன். முதலில் மனிதர்கள் இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு பின்னர் நல்ல மனிதரை தேடுவோம். அதன் பின் பேயை இருக்கா இல்லையா என்று தேடுவோம்" என்றார்.