கபாலி திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் ரஞ்சித் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் காலா கரிகாலன். பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் தனுஷ் இதற்கான அறிவிப்பைத் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த சனி அன்று வெளியிட்டார். முதலில் வெளியான போஸ்டரின்படி இது மும்பை தாராவி பகுதியில் நடைபெறும் கதை என்பதை ஊகிக்க முடிந்தது. தற்போது வெளியான போஸ்டரில் ரஜினி அங்குள்ள லோக்கல் டானாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் படமாக காலா இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.
மெட்ராஸ், கபாலி திரைப்படத்தில் வேலை செய்த ஒளிப்பதிவாளர் முரளி, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் காலா படத்திலும் இயக்குனர் ரஞ்சித்துடன் இணைகின்றனர். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் திலீப் சுப்பராயன் சண்டைப் பயிற்சியில் கபிலன், உமாதேவி, அருண்ராஜா காமராஜ் பாடல் எழுதுகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு பேட்டியளித்த இயக்குனர் ரஞ்சித் 2.0 திரைப்படத்தின் வெளியீட்டை பொறுத்தே காலாவின் வெளியீடு அமையும் என்று தெரிவித்திருந்தார். 2.0 முதலில் ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டு பின்னர் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இன்று வெளியான அறிவிப்பின்படி, 2.0 படத்திற்கு முன்பே காலா வெளியாகும் என்று தெரிகிறது. தொடர்ந்து நடந்து வரும் கிராஃபிக்ஸ் வேலைகளால் 2.0 திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போகிறது என்றும் சொல்லப்படுகிறது.