லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் தயாரிப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம்மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 19 ஆம் தேதி வெளியான படம் லியோ. பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்து வருகிறது.
லியோ படம் வெளியான முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.148 கோடி வசூல் செய்து சர்வதேச அளவில் முதல்நாளில் அதிக வசூல் செய்த தமிழ் படம் என்ற சாதனையைப் படைத்தது. மேலும் முதல் 4 நாட்களில் உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 'வில்லன் யாரு' பாடலை தொடர்ந்து 'ஆர்டினரி பெர்சன்' (Ordinary Person) பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. இந்தப் பாடல் பிரபல இசையமைப்பாளர் ஒட்னிக்கா (Otnicka) இசையமைத்த - 'Where Are You' பாடல் போல் அமைந்துள்ளதாக கருத்து தெரிவித்து வந்தனர். இது சமூக வலைத்தளங்களிலும் வைரலாகப் பரவிய நிலையில் அது சர்ச்சையாகியுள்ளது.
இந்த நிலையில் இசையமைப்பாளர் ஒட்னிக்கா தற்போது இந்த விவகாரம் குறித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், "நண்பர்களே, லியோ திரைப்படம் பற்றி நீங்கள் அனுப்பிய மெசேஜ்களுக்கு நன்றி. நான் எல்லாவற்றையும் பார்க்கிறேன். ஆனால் அனைவருக்கும் பதில் சொல்ல முடியாது. என்ன சூழ்நிலை என்று தெளிவாகத் தெரியவில்லை. ஆனாலும் நாங்கள் இதைப் பற்றி விசாரிக்கிறோம். அதன்பிறகு என்ன நடந்துள்ளது என்பது பற்றி கூறுகிறேன். அதுவரை யாரையும் குற்றம் சொல்லவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.